தமிழக சட்டப்பேரவையில் உரை நிகழ்த்துவதற்காக ஆளுநர் ரவி இன்று காலை தமிழக சட்டப்பேரவைக்கு வரவுள்ளார். கடந்த ஆண்டு ஆளுநர் உரையை திருத்தி வாசித்ததால் ஆளுநருக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். இதனையடுத்து ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்த நிலையில், இன்று மீண்டும் இந்தாண்டுக்கான சட்டப்பேரவை உரை நிகழ்த்த ஆளுநர் ரவி வரவுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம்
தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரையுடன் ஜனவரி மாதம் தொடங்கும் அந்த வகையில் இந்தாண்டு கூட்டத்தொடர் ஜனவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெள்ள பாதிப்புக்கு நிவாரண தொகை வழங்குவது, பொங்கல் பரிசு தொகுப்பு, முதலமைச்சர் வெளிநாடு பயணம் ஆகியவற்றின் காரணமாக பிப்ரவரி மாதம் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டமானது தொடங்கப்படுகிறது.
இன்று காலை 9.55 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்திற்கு வரும் ஆளுநர் ரவிக்கு நுழைவு வாயிலில் சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர். இதன் தொடர்ந்து சிவப்பு கம்பள மரியாதையுடன் உரை நிகழ்த்த வரும் அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை
பின்னர் சபை மார்ஷல் முன் செல்ல, சபாநாயகர், சட்டசபை செயலர் ஆகியோரை ஆளுநர் ஆர்.என். ரவி பின் தொடர்வார். சபையில் சபாநாயகர் இருக்கைக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதன் பிறகு ஆளுநர், தன்னுடைய உரையை ஆங்கிலத்தில் வாசிப்பார். அவர் உரை நிகழ்த்தி முடிந்ததும், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை, சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். தேசிய கீதத்துடன் அன்றைய சபை நிகழ்வுகள் நிறைவடையும். இதனிடையே ஆளுநர் ரவி கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் உரை நிகழ்த்திய போது ஆளுநர் உரையை திருத்தி வாசித்திருந்தார். பெரியார், அண்ணா உள்ளிட்ட வாக்கியத்தையும், தமிழக சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்ற வாக்கியத்தையும் புறக்கணித்திருந்தார்.
ஆளுநர் உரையை முழுவதுமாக வாசிப்பாரா.?
இதனையடுத்து அதிரடியாக தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி முன்னிலையிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளுநர் ரவி சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தாண்டுக்கான உரையை நிகழ்த்த ஆளுநர் ரவி சட்டப்பேரவைக்கு வரவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
என்னது பாமக பெட்டி வாங்குற கட்சியா? இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள்.. டென்ஷனான அன்புமணி.!