திமுகவுக்கு குட்பை சொல்லப் போகும் திருமா !! டுவிட்டர் பக்கத்தில் கொளுத்திப் போட்ட வன்னியரசு !!

By Selvanayagam PFirst Published Feb 13, 2019, 10:41 PM IST
Highlights

திமுகவின் தோழமைக்கட்சியாக இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்போது அந்தக் கூட்டணியில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணி தொடர்பாக திமுக- விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்குள்  ஏற்பட்டுள்ள பிளவை வன்னியரசு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்
.

வரும் ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக செய்து வருகின்றன. தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் இடையே கூட்டணி உருவாகியுள்ளது.

இந்த கூட்டணியில் யார்? யார் ? இடம் பெற்றுள்ளனர் என்பது இதுவரை சஸ்பென்ஸாகவே  உள்ளது. மதிமுக, இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் கூட்டணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக இக்கட்சிகள் திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது அந்தக் கூட்டணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திமுகவின் பொருளாளார் துரைமுருகன் காங்கிரஸ் கட்சி மட்டும் தான் தங்களுடன் கூட்டணி வைத்துள்ளது என்றும், இனி அடுத்து வரும் காலங்களில் திமுக கூட்டணிக்குள் யார் வேண்டுமானாலும் வரலாம், யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என பேசி மற்ற கட்சிகளை கடுப்பாக்கினார்.

இதையடுத்து வைகோ, திருமாவளவன் ஆகியோர் அவசர, அவசரமாக சென்று ஸ்டாலினை சந்தித்தனர். ஆனால் அவரும் சரியான பதிலை தரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வைகோ, திருமா போன்றவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்றனர்.

அதே நேரத்தில் விசிகவின் பரம எதிரியான பாமகவுடன்  கூட்டணி வைப்பது குறித்து திமுக தனியே பேசிக் கொண்டிருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த திருமா, பாமக இருக்கும் கூட்டணில் நான் இருக்க மாட்டேன் என அறிவித்தார். மேலும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார்.

திருமாவை கழட்டி விடுவதற்காகவே பாமகவுடன் திமுக கூட்டணி குறித்து பேசினார்களா என்ற தகவலும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொது செயலாளர் வன்னி அரசு தனது ஃபேஸ் புக் பக்கத்திலும், டிவிட்டரிலும் அவசர, அவசரமாக சில கருத்துககளை பதிவிட்டுள்ளார்.

அதில் அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். - திருவள்ளுவர் ( பொருள்- வலி அறிதல்) …
மற்றவர்களை மதிக்காமலும் தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத்தானே பெரிதாக விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத்தொலைவார்கள்…. என தெரிவித்துள்ளார்.

அதாவது, தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று கூட்டு சேர்ந்து களமாடும் போது உடன் இருப்பவர்களையும் மதிக்காமல், தங்களுடைய வலிமை என்னவென்றும் தெரியாமல், தாங்கள் எதிரணியை எளிதாக வீழ்த்தி விடுவோம் என்று ஆணவத்தோடு செயல்படுபவர்கள் தாங்களாவே வீழ்ந்து விடுவார்கள் என்று  வன்னி அரசு பதிவிட்டுள்ளார். 

இந்தப் பதிவு திமுக அணியில் தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதையும் தாங்கள் மிகுந்த பலத்தோடு இருப்பதாக எண்ணிக் கொண்டு இருப்பவர்கள் மற்றவர்களை மதிக்காமல் இருக்கும்போது அவர்களாகவே வீழ்ந்து விடுவார்கள் என்று கூறுகிறார்.

 
எது எப்படியோ,, திமுக கூட்டணிக்குள்  பாமக வருகிறதோ இல்லையோ விடுதலைச் சிறுத்தைகள் இல்லை என்பதுஇந்த டுவிட்டர் பதிவு மூலம் தெரியவந்துள்ளது.
 

click me!