நாடாளுமன்றத்தை அதிர வைத்த முலாயம் சிங்… நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வர வாழ்த்து !!

By Selvanayagam PFirst Published Feb 13, 2019, 9:07 PM IST
Highlights

நாடாளுமன்றத்தின் கடைசி நாளான இன்று அனைத்து கட்சி தலைவர்களும் நன்றியுரை நிகழ்த்தினர். அப்போது பேசிய  சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என  வாழ்த்தினார். இது அங்கிருந்த எதிர்கட்சித் தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
 

மத்தியில் இருந்து பாஜகவை இறக்க வேண்டும் என ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ், உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு எதிராக மாயாவதியுடன் கைகோர்த்து உள்ளார். லக்னோ விமான நிலையத்தில் தன்னை மாநிலத்தில் ஆட்சி செய்யும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தடுத்து நிறுத்தியதாக புகார் கூறியுள்ள அவர், டெல்லியில், பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் கடைசி நாளான இன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பேசினர். 

அப்போது, சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் பேசும்போது, மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். இதற்காக அவரை வாழ்த்துகிறேன். மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அனைத்து கட்சிகளையும், மோடி ஒருங்கிணைத்து சென்றுள்ளார். பல நல்ல பணிகளை விரைந்து செய்துள்ளார் என்று தெரிவித்தார்.

அப்போது நாடாளுமன்றத்தில்  இருந்த பிரதமர் மோடி, புன்னகைத்தபடி, முலாயமுக்கு நன்றி தெரிவித்தார். முலாயம் சிங்கின் இந்த பேச்சால் எதிர்கட்சி உறுப்பினர்கள் அதிர்ந்து போயினர்.

முலாயம் பேச்சு குறித்து காங்கிரஸ்., தலைவர் ராகுல் கூறுகையில், 'எனது மதிப்பிற்குரிய தலைவர் முலாயம் சிங்கிற்கு, தேசிய அளவில் மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. ஆனால் அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும், அவரது எண்ணத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன்' என்றார்.

click me!