மக்களே மகிழ்ச்சியான செய்தி.. முழு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை.. அமைச்சர் அதிரடி.

Published : Jan 11, 2022, 02:32 PM IST
மக்களே மகிழ்ச்சியான செய்தி.. முழு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை.. அமைச்சர் அதிரடி.

சுருக்கம்

அப்போது பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுமா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் தமிழக முதலமைச்சர் உறுதியாக உள்ளார். 

தமிழகத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை என  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் அமைச்சர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல், உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களின் தொடர்பில் உள்ளவர்களும் இந்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி மட்டுமே வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்பதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் முதல் தவணைத் தடுப்பூசியும், 60 சதவீதத்தினர் இரண்டாவது தவனை தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் இதுவரை 8.53 கோடிட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருப்பவர்களை நேரில் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று அவர்களுக்கு  பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவிகளை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் தினசரி பாதிப்பு என்பது 2 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்து வருகிறது.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக மிதமான அறுகுறியே இருப்பதால் அவர்களை ஐசிஎம்ஆர் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி வருகிறோம். வீட்டு தனிமையில் இருப்பவர்கள் காலை, மாலை என 2 முறை பல்ஸ் ஆக்சி மீட்டர் பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு இந்த கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒருவேளை அவர்களின் ஆக்சி மீட்டர் அளவு 92 என்ற புள்ளிக்கு கீழ் வந்தால், உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கலாம். அப்போது உடனே மருத்துவ குழு அவருக்கு தேவையான சிகிச்சை உதவிகளை செய்யும், இதுபோன்ற முறையில் 26 ஆயிரம் பேர் சென்னையில் சிகிச்சையில் உள்ளனர். அதில் 21,987  பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். அதே நேரத்தில் பல்வேறு இணை நோய் உள்ளவர்கள் நேரடியாக மருத்துமனைக்கு வரலாம், ஆனால் லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொள்ளலாம். இப்படி வீட்டில் இருப்பவர்களை கண்காணிக்க 178 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார். 

அதே நேரத்தில் கொரோனா பரவல் காரணமாக 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை நேரில் வந்து திறந்துவைக்க இருந்த பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக கல்லூரிகளை திறந்து வைக்க உள்ளார். நாளை மாலை 4 முதல் 5 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் என்றார். தற்போது வருபவர்களுக்கு 85% ஒமிக்ரான் அறிகுறி இருக்கிறது. புதிய வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்பதால் அதிக கிளஸ்டர் உள்ள ஏரியாக்களில் மட்டும் பாதிப்புகளை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கிறோம் என்றார். அப்போது பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுமா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் தமிழக முதலமைச்சர் உறுதியாக உள்ளார். அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து முடிவு எடுக்கிறார். இந்த விஷயத்தில் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் வராது. பொங்கலுக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கு இருக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.  
 

PREV
click me!

Recommended Stories

ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!