
பள்ளி திறப்பிற்கு முன்பாக ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கொரோனா கால கட்டத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாத நிலையில் விரைவில் அதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இரு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டனர். இருப்பினும் பள்ளிகள் திறக்க உள்ள சூழலில் தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் இரு தவணை தடுப்பூசி போட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி போட முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி சுகாதாரத் துறை உதவியுடன் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 50 முதல் 60 சதவிகித வரையிலான பாடத் திட்டம் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் குறைக்கப்பட்டது. பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டாலும் மாணவர்கள் அடிப்படையில் தெரிந்து கொள்ளத் தேவையான அனைத்து பகுதிகளும் ஆசிரியர்களின் சார்பில் கற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.