சசிகலாவிற்கு நல்ல தோழி..! ஓபிஎஸ் மனைவி குறித்து வெளிவராத தகவல்கள்..!

By Selva KathirFirst Published Sep 2, 2021, 11:45 AM IST
Highlights

ஓபிஎஸ் சென்னையில் இருந்தால் விஜயலட்சுமி சென்னையில் இருப்பார், தேனியில் இருந்தால் தேனிக்கு வந்துவிடுவார். டெல்லி சென்றாலும் உடன் விஜயலட்சுமி கண்டிப்பாக செல்வார். வெளிநாட்டு பயணங்களின் போதும் கூட ஓபிஎஸ்சுக்கு நிழலாக இருந்து வந்தவர் விஜயலட்சுமி. இதே போல் ஓபிஎஸ்சும் எங்கு சென்றாலும் உடன் மனைவியை அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி இறந்துவிட்டதாக தகவல் கிடைத்த உடன் ஒரு நிமிடம் சசிகலா ஆடிப்போய்விட்டதாகவே சொல்கிறார்கள்.

66 வயதாகும் விஜயலட்சுமி சுமார் 45 வருடங்களாக ஓபிஎஸ்சுடன் வாழ்ந்து வந்தவர். இவரது சொந்த ஊர் உத்தமபாளையம் ஆகும். அங்கு விஜயலட்சுமியின் தந்தை மிகப்பெரிய மில் வைத்திருந்தார். அத்தோடு உத்தமபாளையத்தில் மிகப்பெரிய அளவில் விவசாயமும் செய்து வந்தவர். தமிழக நிதி அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தந்தை பிடிஆர் பழனிவேல் ராஜன் காலம் முதலே அவர்களுக்கு சொந்தமான நிலங்களில் விஜயலட்சுமியின் தந்தை அழகு பாண்டி தான் விவசாயம் செய்து வருகிறார்.

தற்போதும் கூட பிடிஆர் குடும்பத்துடன் இணைந்தே விவசாயம் உள்ளிட்ட பணிகளில் அழகுபாண்டி கவனித்து வருகிறார். இந்த அளவிற்கு வசதியானவராக இருந்தாலும் கூட தேனி பெரியகுளத்தில் பால் பண்ணை வைத்திருந்த ஓபிஎஸ்சுக்கு தனது மகள் விஜயலட்சுமியை மணம் முடித்து கொடுத்திருந்தார். திருமணம் ஆனது முதலே ஓபிஎஸ் – விஜயலட்சுமி இடையிலான பந்தம் நெருக்கமாகியுள்ளது. கணவர் எம்எல்ஏ, அமைச்சர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் என பெரிய பதவிகளில் இருந்தாலும் வீட்டில் சாதாரண பெண்ணாகவே விஜயலட்சுமி வலம் வந்துள்ளார்.

அதிலும் ஓபிஎஸ் சென்னையில் இருந்தால் விஜயலட்சுமி சென்னையில் இருப்பார், தேனியில் இருந்தால் தேனிக்கு வந்துவிடுவார். டெல்லி சென்றாலும் உடன் விஜயலட்சுமி கண்டிப்பாக செல்வார். வெளிநாட்டு பயணங்களின் போதும் கூட ஓபிஎஸ்சுக்கு நிழலாக இருந்து வந்தவர் விஜயலட்சுமி. இதே போல் ஓபிஎஸ்சும் எங்கு சென்றாலும் உடன் மனைவியை அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதே சமயம் கட்சிக்கூட்டம், போராட்டம், பேச்சுவார்த்தை என்று வரும் போது மட்டும் விஜயலட்சுமி கணவரை பிரிந்திருப்பார்.

அப்போதும் கூட சரியான நேரத்திற்கு ஓபிஎஸ்சை அழைத்து சாப்பட்டுவிட்டீர்களா என்று கேட்காமல் இருக்கமாட்டார் என்கிறார்கள். ஓபிஎஸ்சும் மனைவி எங்கு இருந்தாலும் நேரத்திற்கு தொலைபேசியில் அழைத்து சாப்பிடச் சொல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இரண்டு மகன்கள், ஒரு மகள் என்கிற நிலையில் மூன்று பிள்ளைகள் மீதும் விஜயலட்சுமிக்கு மிக அதிக பாசம். அதிலும் இளைய மகன் ஜெயபிரதீப் என்றால் விஜயலட்சுமி ஓவர் செல்லம் என்கிறார்கள். இளையமகனை எம்எல்ஏ, அமைச்சராக்கி பார்க்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால் கடைசி வரை அவரது ஆசை நிறைவேறவில்லை. தாய் மீதான அளவுக்கு அதிகமான பாசத்தால் தனது இனிசியலில் கூட தாய் விஜயலட்சுமியின் பெயரை சேர்த்துக் கொண்டவர் ஜெயபிரதீப். இதே போல் அரசியல் ரீதியாகவும் பல்வேறு சமயங்களில் ஓபிஎஸ்சுக்கு விஜயலட்சுமி உதவியதாக சொல்கிறார்கள். கடந்த 2001ம் ஆண்டு ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்த போது முதலே போயஸ் கார்டனுக்கு விஜயலட்சுமியும் சென்று வந்து கொண்டிருந்தார். அப்போது சசிகலாவுடன் ஏற்பட்ட பழக்கம் தற்போது வரை விஜயலட்சுமிக்கு நீடித்துள்ளது. இதனால் தான் விஜயலட்சுமி மறைவு செய்தியை கேட்டதும் கண்ணீரும் கம்பளையுமாக சசிகலா மருத்துவமனைக்கு விரைந்து வந்ததாக சொல்கிறார்கள்.

மருத்துவமனைக்கு காரில் இருந்து இறங்கியது முதல் ஓபிஎஸ்சை சென்றை சந்திக்கும் வரை சசிகலா கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. இதே போல் ஓபிஎஸ்சுடன் பேசும் போதும் சசிகலா கண்ணீர்விட்டு அழுதே விட்டார். அந்த அளவிற்கு விஜயலட்சுமியுடன் நெருக்கமான உறவை சசிகலா வைத்திருந்ததாக சொல்கிறார்கள். ஓபிஎஸ் சசிகலாவிற்கு எதிராக தர்ம யுத்தத்தை தொடங்கிய போது விஜயலட்சுமி மூலமாக சசிகலா தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிறகு தினகரனை ரகசியமாக சென்று ஓபிஎஸ் சந்தித்ததின் பின்னணியிலும் விஜயலட்சுமி இருந்ததாக கூறுகிறார்கள். இந்த அளவிற்கு தனிப்பட்ட வாழ்க்கை மட்டும் அல்லாமல் அரசியல் அரங்கிலும் விஜயலட்சுமி ஓபிஎஸ்சுக்கு மிகுந்த உறுதுணையாகவே இருந்துள்ளார்.  

click me!