
செப்டம்பர் 1 ம் தேதி முதல் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்திற்கு 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காப்பீடு நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், வாகனத்திற்கான ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் என்ற அடிப்படையில் மட்டுமே வாகனத்துக்கு காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் அல்லாத ஒருவர் இறப்பிற்கு ஒரு லட்ச ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும். சடையப்பன் வாகன ஓட்டுநராக அடையாளப்படுத்தப்பட்டு இருந்தாலும் விபத்து நடந்தபோது அவர் வாகனத்தை இயக்கவில்லை. அவர் சம்பளம் பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் வாதிட்டார். இதனை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிம், வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என்று அனைவரையும் உள்ளடக்கும் வகையில் ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.
இதைத் தொடர்ந்து புதிய வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் முறையில் கட்டாயமாக காப்பீடு செய்ய வேண்டும் என போக்குவரத்துத் துறை இணை ஆணையர் அனைத்து மண்டல அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். இந்த நிலையில், பொது காப்பீட்டு கவுன்சில், உயர்நீதிமன்றத்தை அணுகி பம்பர் டூ பம்பர் காப்பீட்டை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரியது. கோரிக்கையை ஏற்று கொண்ட நீதிபதி, செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம்என்ற உத்தரவை நிறுத்திவைப்பதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.