
பேச்சுவார்த்தை மூலம் விரைவில் நல்லது நடக்கும் எனவும், அதற்கு முன் நிபந்தனைகள் பற்றி பேசுவது முறையாக இருக்காது எனவும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.
அதற்கு பதிலளித்து பேசிய ஒ.பி.எஸ் தரப்பு தர்ம யுத்தத்தின் முதல் வெற்றி என்று கூற அதற்கு எடப்பாடி தரப்பு அமைச்சர்கள் மறுப்பு கூற மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் எடப்பாடியின் பேச்சுவார்த்தை கனவு அவ்வளவு தான் என்று எதிர்பார்த்த நிலையில், எடப்பாடியும் ஒ.பி.எஸ்சும் தனது அணிகளை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து எடப்பாடி தரப்பில், ஒ.பி.எஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் வைத்தியலிங்கம் தலைமையில் 7 கொண்ட குழு அமைக்கப்பட்டது.
தொடர்ந்து இன்றைக்குள் தனது தரப்பிலும் குழு அமைக்கப்படும் என ஒ.பி.எஸ் கூறியிருந்தார்.
அதன்படி தற்போது முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி தலைமையில், 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், பாண்டியராஜன், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோர் இந்த குழுவில் உள்ளனர்.
இதைதொடர்ந்து பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பேச்சுவார்த்தை மூலம் விரைவில் நல்லது நடக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும், பேச்சுவார்த்தையின் நிபந்தனைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, பேச்சுவார்த்தைக்கு முன் நிபந்தனைகள் பற்றி பேசுவது முறையாக இருக்காது என கூறிவிட்டு ஒ.பி.எஸ் சென்று விட்டார்.