
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது விருப்பம் எனவும், அவர் மக்கள் மனநிலையை நன்கு புரிந்தவர் எனவும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக புகைப்படம் எடுத்து வருகிறார்.
கடந்த 4 நாட்களாக இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடைசி நாளான இன்று அரியலூர், திருச்சி,பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். அப்போது அரசியலில் குதிப்பதை தீர்மானித்தது போல் பரபரப்பாக பேசினார்.
இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது விருப்பம். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். ரஜினிகாந்த் மக்கள் மன நிலையை நன்கு புரிந்தவர். எனவே அவர் சரியான முடிவை எடுப்பார் என தெரிவித்தார்.