படிப்படியாக வளர்ந்த ஸ்டாலினுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.. மக்களிடம் மன்றாடும் அழகிரி..

By Ezhilarasan BabuFirst Published Mar 20, 2021, 2:58 PM IST
Highlights

இசுலாமியரான ஹாசன் நாகாத்தம்மன் வாசலில் பிரசாரத்தை தொடங்குகியிருக்கிறார். இதுதான் மதச்சார்பின்மை. நாகாத்தம்மன் ஹாசனுக்குதான் அருள் வழங்குவார் என்றார். 

படிப்படியாக வளர்ந்த ஸ்டாலினுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் எனவும், அவர் முதல்வரானால் மன்மோகன் சிங்கின் பொருளாதார கொள்கையை பின்பற்றுவார் எனவும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே. எஸ் அழகிரி கூறியுள்ளார். இன்று சென்னை திருவான்மியூரில் கே.எஸ் அழகிரி நாகாத்தம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். முதல் கட்டமாக வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சியின் அசன் மௌலானாவை  ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி கே. எஸ் அழகிரி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 

திமுக கூட்டணி வென்று ஸ்டாலின் முதல்வரானால் மட்டுமே விலைவாசி உயர்வு கட்டுக்குள் வரும். மன்மோகன் ஆட்சியை காட்டிலும் 40 சதவீதம் விலை அதிகமாக பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்துள்ளது. ஊதியத்தில் பெரும்பகுதி இதற்கே செலவாகிவிடுகிறது. பினாமி அரசாக தமிழக அரசு இருக்கிறது. தமிழ்நாட்டை டெல்லி ஆளுகிறது. பாஜக 234 தொகுதியிலும் போட்டியிடுகிறது அதிமுக போட்டியிடவில்லை. மோடியா லேடியா என கேள்வி எழுப்பி தைரியமாக இருந்தவர் ஜெயலலிதா. மடியில் கனம் உள்ளதால் எடப்பாடி பயத்தில் உள்ளார். வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை என கூறும் பழனிசாமி அரசு கடந்த 5 ஆண்டில் எத்தனை பேருக்கு அரசு வேலை கொடுத்தது? 

தேர்தலில் வென்றால் 15 லட்சம் போடுவதாக மோடி கூறினாரே..? கொடுத்தாரா. 7 லட்சம் கோடி கடனை வைத்துள்ள தமிழக அரசு ஆண்டுக்கு 6 சமையல் உருளை எப்படி தர முடியும்? ஸ்டாலின் முதல்வரான பிறகு தமிழக அரசின் பொருளாதார கொள்கையை காங்கிரஸ் மாற்றும். ஸ்டாலின் கிளை செயலாளராக இருந்து கட்சியில் வளர்ந்தவர். படிப்படியாக வளர்ந்த ஸ்டாலினுக்கு வாய்ப்பு கொடுங்கள். 5 ஆண்டுக்கு முன்பே ஸ்டாலினை முதல்வராக அறிவித்தவர் ராகுல்காந்தி. மன்மோகனின் பொருளாதார கொள்கையை திமுக பின்பற்றும். விவசாயிகளுக்காக எம் .எஸ் சாமிநாதன் அறிக்கையை பின்பற்றுவோம். டெல்லி போராட்ட விவசாயிகளை மோடி இன்றுவரை சந்திக்கவில்லை. காந்தி் நேரு சாஸ்திரி காமராசர் கருணாநிதி போல மக்களை நேரில் சந்திக்க வேண்டும். 

இசுலாமியரான ஹாசன் நாகாத்தம்மன் வாசலில் பிரசாரத்தை தொடங்குகியிருக்கிறார். இதுதான் மதச்சார்பின்மை. நாகாத்தம்மன் ஹாசனுக்குதான் அருள் வழங்குவார் என்றார். பின்னர் வேட்பாளர் அசன் பேசியதாவது: என் தந்தை 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினரகவும் இருந்தவர். நான் அரசியலுக்கு வந்தது சம்பாதிக்க இல்லை, சேவை செய்ய. வேளச்சேரி மாஃபியாக்கள் பிரச்சனையை தீர்ப்பேன். வெள்ளச்சேரியாக மாறியுள்ளதை மாற்றி காட்டுவேன் ". மேலும் சைதாப்பேட்டை திமுக வேட்பாளரும் , திமுக மாவட்டச் செயலாளருமான மா. சுப்பிரமணியனும் கே.எஸ்.அழகிரி  பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். 

 

click me!