தகுதி இல்லாத வேட்பு மனுக்கள் தள்ளுபடி.. தேர்தல் ஆணையம் அதிரடி.. திங்கட் கிழமை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல்.

By Ezhilarasan BabuFirst Published Mar 20, 2021, 1:53 PM IST
Highlights

இந்த முறை வழக்கத்திற்கு மாறாக வேட்பாளர்களின் சுயவிவரங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார்போல்  பிரமாண பத்திரத்தில் தேவையான விவரங்களையும் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ளனர். 

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 7 ஆயிரத்து 133 பேர்  மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில் அந்த மனுக்களின் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. அதில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத மனுக்களை அதிகாரிகள் தள்ளுபடி செய்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. வழக்கம் போல இந்த தேர்தலிலும் திமுக-அதிமுக கூட்டணிக் கிடையேதான் போட்டி என்ற சூழல் உருவாகியுள்ளது. மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட கமலஹாசன் அதில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் கூட முதல்வர் வேட்பாளர் என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்திக்கிறார். 

அமமுக உடன் தேமுதிக கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. வழக்கம் போல நாம் தமிழர் கட்சி தனித்தே 234 தொகுதிகளிலும் களம் காண்கிறது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிட கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனு தடை செய்யப்பட்டு  வந்தன, இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் போடி சட்டமன்ற தொகுதியிலும், முறைப்படி வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதேபோல மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் கோவை தெற்கிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவெற்றியூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஏராளமான அரசியல் கட்சிகள் அமைப்புகள் இதுவரையில் மொத்தம் 7 ஆயிரத்து 133 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்த முறை வழக்கத்திற்கு மாறாக வேட்பாளர்களின் சுயவிவரங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார்போல் பிரமாண பத்திரத்தில் தேவையான விவரங்களையும் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை வேட்புமனு தாக்கல் செய்த மொத்த எண்ணிக்கையில் 1,080 பேர் ஆண்களும் 1050 பேர் பெண்களும் ஆவர். மயிலாப்பூர் மற்றும் மதுரை தெற்கு தொகுதி என மொத்தம் மூன்று திருநங்கைகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில்  இன்று காலை முதல் அவர்கள் தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. வேட்புமனுவில் தகவல்கள் சரிவர இல்லாத காரணத்தினால் பல மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் முன்கூட்டியே சில முக்கிய நட்சத்திர வேட்பாளர்கள் கூடுதலாக மூன்று முதல் நான்கு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 4 மனுக்களை தாக்கல் செய்துள்ளார். இதேபோல திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 3 மனுக்கள்தாக்கல் செய்துள்ளார். 

இந்நிலையில் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வேட்புமனுக்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எத்தனை மனுக்கள் ரத்து செய்யப்பட்டது, எத்தனை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற முழுவிவரம் இன்று மாலை வெளியாகும் என கூறப்படுகிறது. அதன்பிறகு தேர்தலில்  போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வேட்பு மனுவை வாபஸ் பெற விரும்புவோர் திங்கட்கிழமை மாலை 3 மணிக்குள் வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 

click me!