
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்ல சாவியைக் கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தீபாவும் தீபக்கும் மனு அளித்துள்ளனர்.
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையாக்கப்படும் என கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். நிலத்தை கையகப்படுத்துவதற்கான தொகையையும் உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு செலுத்தியது. ஜெயலலிதா இல்லம் அரசின் சொத்தாக்கப்பட்டது. நீதிமன்றத்தை நாடி வாரிசுதாரர்கள் தங்களுக்கான தொகையை பெற்றுக்கொள்ளாலம் என்றும் தமிழ் நாடு அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசு தீபா, தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில், "ஜெயலலிதா என்ற தனிநபர் வாழ்ந்த குடியிருப்பை அரசுடமையாக்க அரசுக்கு அதிகாரமில்லை. இதுதொடர்பான உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். குடியிருப்பை, நினைவில்லமாக மாற்றவும் தடை விதிக்க வேண்டும். ஜெயலலிதாவின் சொத்து தொடர்பான வழக்கில், தங்களை நேரடி வாரிசு என சென்னை உயர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ஆனால், தங்களிடம் கலந்தாலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தீர்ப்பாணை தொகையான ரூ.67,88,59,690/-ஐ நகர நீதிமன்றத்தில் வாரிசுதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலைப்பாடு சட்டத்திற்கு எதிரானது” என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி சேஷாயி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் செல்லாது என்று உத்தரவிட்டார். ஜெயலலிதா வாரிசுகள் என அறிவிக்கப்பட்ட தீபா, தீபக்கிடம் வேதா இல்லத்தின் சாவியை மூன்று வாரங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் ஜெயலலிதா இல்லத்தை அரசுடமையாக்குவதற்கு அரசு சார்பில் இழப்பீடாக நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட ரூ.67.9 கோடி அரசுக்கு திருப்பி அளிக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அதிமுக தரப்பில் மேல் முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, வேதா இல்லத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீபாவும் தீபக்கும் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணியிடம் மனு அளித்துள்ளார்கள். அந்த மனுவுடன், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் நகலையும் தீபா, தீபக் இணைந்துள்ளனர். இந்த மனு தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை செய்த பிறகு முடிவு செய்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.