அந்த நாள் வரப்போகுது.. உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடே கொண்டாடப் போகுது.. அன்பில் மகேஷ் அதிரடி சரவெடி கணிப்பு.!

By Asianet TamilFirst Published Nov 27, 2021, 10:09 PM IST
Highlights

உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு அந்தத் தொகுதி மக்களின் செல்லப் பிள்ளையாகவே திகழ்ந்து வருகிறார்.

உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும் என்று தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய 44-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். உதயநிதியின் பிறந்த நாளையொட்டி பிளக்ஸ் போர்டுகள் போன்றவற்றை வைக்க வேண்டாம் என்று உதயநிதி தெரிவித்திருந்தார். என்றாலும் திமுகவினர் வழக்கம்போல் உற்சாகமாகவே உதயநிதியின் பிறந்த நாளைக் கொண்டாடினர். அமைச்சர்கள் காத்திருந்து உதயநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துவிட்டு சென்றார்கள். 

பிறந்த நாளையொட்டி பல இடங்களில் நலத்திட்ட உதவிகளையும் திமுகவினர் வழங்கினார்கள். அந்த வகையில் பெரம்பூர் தொகுதியில் உதயநிதியின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்பில் மகேஷ் பேசுகையில், “உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு அந்தத் தொகுதி மக்களின் செல்லப் பிள்ளையாகவே திகழ்ந்து வருகிறார்.

அந்தத் தொகுதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று ஒவ்வொருவரின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்கிறார். அதன்மூலம் அவர்கள் வீட்டுப் பிள்ளையாகவே உதயநிதி ஸ்டாலின் வலம் வருகிறார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மக்கள் மட்டும் உதயநிதி ஸ்டாலினை சொந்தம் கொண்டாடினால் போதாது. அவரை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவின் வெற்றிக்காக உதயநிதி ஸ்டாலினும் அயராமல் உழைத்தார். தமிழகம் முழுவதுமே மழை பெய்துகொண்டிருக்கிறது. மழை வந்துவிட்டால் கோட்டையில் உட்கார்ந்து கொண்டு ஆர்டர் போடும் முதலமைச்சர் இல்லை. மக்களோடு மக்களாய் களத்தில் நிற்கும் முதல்வராக நம்முடைய முதல்வர் இருக்கிறார்.

இன்று தமிழக முதல்வர் இந்தியாவிலேயே முன்னுதாரணமாக திகழ்கிறார். குறிப்பாக காவல் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருந்த காலம் எல்லாம் மாறிவிட்டது. தற்போது தமிழக முதல்வர் காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளர் இருக்கையில் அமர்ந்து கோப்புகளைச் சரி பார்த்து மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் விதமாக செயல்பட்டு வருகிறார்” என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
 

click me!