நோன்புக் கஞ்சி தயாரிக்க இலவச பச்சரிசி கொடுங்கள்... விரைந்து வழங்க அரசை வலியுறுத்தும் ஜவாஹிருல்லா..!

By Asianet TamilFirst Published Apr 11, 2021, 8:50 PM IST
Highlights

தேர்தல் ஆணையத்தின் அனுமதியை விரைவில் பெற்று பள்ளிவாசல்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்கத் தேவையான பச்சரிசியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
 

ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு தமிழக அரசு இலவச பச்சரிசி வழங்குவது வழக்கம். நோன்புக் கஞ்சி தயாரிப்பதற்காக இந்த அரிசி பள்ளிவாசல்களில் பயன்படுத்திக்கொள்ளப்படும். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கிலும் இலவச பச்சரிசி வழங்கப்பட்டது. ரமலான் மாதம் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இதுவரை இலவச பச்சரிசி வழங்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அறிவிப்பு வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “முஸ்லிம்கள் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதும், நோன்பினைத் துறக்க நோன்பாளிகளுக்கு இலவச நோன்புக் கஞ்சியை வழங்குவதும் வழக்கமான நடைமுறை. ஆண்டுதோறும் நோன்புக் கஞ்சி தயாரிக்கத் தமிழக அரசின் சார்பில் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இலவச பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும் பள்ளிவாசல்களுக்கான அரிசி வழங்குவது தொடர்பான அறிவிப்பு தாமதமாகி வருகிறது.
புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு வழங்கும் அரிசி என்பது வழக்கமான நடைமுறை என்பதாலும், புனித ரமலான் நோன்பு தொடங்க ஒருசில நாட்களே உள்ள காரணத்தினாலும் தமிழக அரசு தேர்தல் ஆணையத்தின் அனுமதியை விரைவில் பெற்று பள்ளிவாசல்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்கத் தேவையான பச்சரிசியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்”. என அறிக்கையில் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
 

click me!