கட்சி பாகுபாடின்றி வாட்டி வதைக்கும் கொரோனா... அதிமுக, காங்கிரஸ் தலைமைக்கு ஒரே நாளில் காத்திருந்த அதிர்ச்சி...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 11, 2021, 6:05 PM IST
Highlights

பல்லடம் சட்டமன்ற அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு களத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்த வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கட்சி பாகுபாடின்றி வேட்பாளர்கள் பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால், அவர்கள் இல்லாமலேயே வாக்கு சேகரிக்கும் தேர்தலாக 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அமைந்தது. 

முதலில் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த சந்தோஷ் பாபுவில் தொடங்கிய கொரோனா தொற்று, அண்ணா நகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜ், சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜ், விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, திருவள்ளூர் அமமுக வேட்பாளர் குரு, திமுகவை பொறுத்தவரை குறிஞ்சிபாடி தொகுதி வேட்பாளர் பன்னீர்செல்வம், அம்பத்தூர் வேட்பாளர் ஜோசப் சாமுவேல், பாபநாசம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், மமக தலைவருமான ஜவாஹிருல்லா ஆகியோர் வரை தொடர்ந்தது. 

தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. தேர்தலுக்குப் பிறகாவது கொரோனாவிடம் இருந்து தப்பிக்கலாம் என நினைத்த வேட்பாளர்களையும் தொற்று பாடாய்படுத்தி வருகிறது.   ஸ்ரீபெரும்புதூர்  தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய  கு.செல்வப்பெருந்தகை, பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார், தியாகராய நகர் தொகுதி திமுக வேட்பாளார் ஜெ.கருணாநிதி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்புவின் கணவர் சுந்தர் சிக்கும், அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு வேட்பாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. 

பல்லடம் சட்டமன்ற அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல், சளியால் அவதிப்பட்டு வந்த எம்.எஸ்.எம்.ஆனந்தன், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அடுத்து நெடுங்காடு தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்துவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

click me!