எம்.எல்.ஏ., ஆக பதவியேற்க வேண்டியவருக்கு இப்படியொரு நிலையா?... துக்க செய்தி கேட்டு துடிதுடித்த ஸ்டாலின்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 11, 2021, 2:45 PM IST
Highlights

ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. மாதவராவ் கொரோனா பெருந்தொற்று சிகிச்சை பலனளிக்காமல் மறைவெய்தினார் என்ற துயரமிகு செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்

திமுக கூட்டணியில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் சார்பாக தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட மாதவராவ், வேட்புமனு தாக்கல் செய்த இரு தினங்களிலேயே கொரோனா தொற்று தென்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதும், அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்றே வந்தது. 

நேற்று நுரையீரல் தொற்று அதிகரித்து மூச்சுத்திணறல் அதிகமானதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 7.55 மணி அளவில் காலமானார். காங்கிரஸ் வேட்பாளரான மாதவராவின் மரணத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. மாதவராவ் கொரோனா பெருந்தொற்று சிகிச்சை பலனளிக்காமல் மறைவெய்தினார் என்ற துயரமிகு செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் - சட்டமன்ற உறுப்பினராக தமிழகச் சட்டமன்றத்திற்குள் நுழைந்திருக்க வேண்டிய அவரது திடீர் மறைவு அத்தொகுதி மக்களுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  பொதுவாழ்வில் இருக்கும் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் - அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என உருக்கமாக இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

click me!