
பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை தூக்கிலிட வேண்டுமென அக்கட்சி தலைவர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார். ஒரு கருத்துக்கு எதிர் கருத்து இருக்க கூடாதா என கேள்வி எழுப்பிய அவர், இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் நீட் தேர்வுக்கு எதிராக தூண்டும் வகையில் பேசியதுதான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதில் தொடர்புடைய ரவுடி கருக்கா வினோத் என்பவரை போலீசாரை கைது செய்துள்ளனர். ஆயுதம் கையாளுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் போன்ற பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை மதுராந்தகம் சிறையில் நேற்று காலை அடைத்தனர். இந்த நிலையில், மதுரையில் தங்கியிருந்த கருக்கா வினோத்தின் மனைவி வண்ணம்மாள் என்பவரை, சென்னை அழைத்து வந்த மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசிய பின் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு கருக்கா வினோத் பேசியுள்ளார். அப்போது அவர் என்ன பேசினார் என்பதை அறிவதற்காக, காவல்துறையினர் தற்போது வண்ணம்மாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் இது ஒருபுறம் நடந்து வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர்கள் இந்த சம்பவத்தை பல வகைகளில் விமர்சித்து வருகின்றனர்.
அதில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக எச்.ராஜா இந்த சம்பவத்தில் அரசியல் பின்னணி உள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார். 133 வது வார்டு பா.ஜ.க வேட்பாளர் காளிதாசை ஆதரித்து பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா தியாகராயநகர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, தடுப்பூசி கொடுத்து உயிரை காப்பாற்றிய மோடிக்கு வாய்ப்பு கொடுங்கள் என பொதுமக்களிடம் வாக்கு கேட்டு வருகிறோம், இந்த முறை பா.ஜ.க வுக்கு வாய்ப்பு கொடுப்போம் என பொதுமக்களும் தெரிவித்து வருகின்றனர். இதுவரை 130 கோடி மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உயிரையும் காத்து உணவையும் கொடுக்கும் நல்ல பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் பா.ஜ.க வுக்கு வாக்களிக்க வேண்டும், தமிழகத்தில் ஊழல் மலிந்து அராஜகம் தலைவிரித்தாடி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது.
உடனடியாக காவல்துறை ஏன் தடையங்களை அழிக்க வேண்டும், ஓநாய்களிடம் இருந்து ஏதாவது காவல் துறைக்கு உத்தரவு வந்ததா? என கட்டாமாக பேசினார். மேலும் இந்த விவகாரத்தில் மாநில காவல்துறை மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், புலியை கொடுக்க சொன்னால் பல்லியை கொடுகிற அரசு இது எனவும் விமரசித்தார். இந்த ஊழல் அராஜக கும்பலை மக்கள் மூட்டை கட்ட இந்த தேர்தலில் முடிவு செய்வார்கள் என குறிப்பிட்ட அவர், நீட்டுக்கு எதிராக பாஜக நின்றால் கமலாலயத்தில் குண்டு வீசிவானா? எதிர் கருத்தே இருக்க கூடாதா? குண்டுவீசிய நபரை தூக்கிலிட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
மேலும் பேசிய அவர் 2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தீய சக்திகள் மதகலவரத்தை தூண்டிவிட நினைக்கிறார்கள். குறிப்பாக திருமாவளவன் ஏன் நாடாளுமன்றத்தில் அல்லாஹு அஃபர் என கூற வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார். பொருளாதார ரீதியில் அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே பள்ளி கூடங்களில் சீருடை பின்பற்றபடுகிறது. பள்ளிக்கூடத்தில் உள்ள நடைமுறைகளை பின்பற்ற முடியாதவர்கள் மதரஸா விற்கு செல்ல வேண்டியது தானே ?தேர்தலுக்கு பிறகு விஸ்வநாதர் கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள குயின்ஸ் லேண்டை இடிக்கும் வரை அங்கேயே அமர்ந்து போராட்டம் செய்ய முடிவு செய்துளேன் என்றும் தெரிவித்தார்.