
திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாக வாழ்க்கை நடத்தும் சமூக சேவகர் அன்னா ஹசாரே, இளைஞர்களுக்கு ஒரு அறிவுரை கூறியுள்ளார். அதாவது, அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்கள், அவசியம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், தன்னுடைய பாதையை யாரும் பின்பற்ற வேண்டாம் என்றும், கறைபடியாத வாழ்க்கை வாழ வேண்டுமானால் இந்தப் பாதை மிகவும் கடினமானது என்றும் கூறியுள்ளார் இந்தக் காந்தியவாதி.
தில்லியில் ஒரு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசினார் அன்னா ஹசாரே. அப்போது அவர், திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாக வாழ்வது எளிதானதல்ல! அது, கூர்மையான வாள் மீது நடப்பதை விட மிகவும் கடினமான ஒன்று.
இளைய தலைமுறை அவசியம் ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். தூய்மையான எண்ணங்கள், செயல்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் தாங்கள் விரும்பும் துறையாக அரசியலோ அல்லது எந்தத் துறையோ இருந்தாலும் பரவாயில்லை, என்னுடைய இந்தப் பாதையை பின்பற்றாதீர்கள். நான் இப்போதும் பிரமசாரியாக உள்ளேன். இப்போதும் திருமணமாகாமல் உள்ளவர்களுக்கான எனது செய்தி, இதுவரை திருமணமாகாமல் இருப்பவர்கள், திருமணமாகாதவர்கள் என்ற சூழ்நிலையுடன் எப்போதும் இருக்க வேண்டாம் என்பதே!
ஆயிரம் ஆண்டுகள் தவம் இருந்தார் விஸ்வாமித்ரர் என்ற மகரிஷி. அவரையே மனம் அலைபாய வைத்து விட்டது மேனகா என்ற அப்சரஸ் மூலமாக. மணமாகாத வாழ்க்கை என்பது முட்கள் நிறைந்தது. மனம் அலைபாயும். அந்த சூழலைத் தடுப்பது நல்லது என்றார் ஹசாரே.
1965ல் இந்திய பாகிஸ்தான் போரில் ஒரு வீரராகப் பங்கேற்றவர் ஹசாரே. அதன் பின்னர் நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்று தீர்மானித்தார். இதை நினைவு கூர்ந்த ஹசாரே, “அந்த 25ஆம் வயதில், நான் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று முடிவு எடுத்தேன். சமுதாயத்தின் வளர்ச்சிக்காக ஈடுபடுவது என நினைத்தேன்” என்று கூறியுள்ளார் ஹசாரே.
ஆனால், அன்னா ஹசாரே முன்னர் தனது சுயசரிதை புத்தகத்தில், அந்தச் சிறு வயதில் தான் எடுத்த முடிவுக்குப் பின்னர், நடுத்தர வயதில், தெருவில் போகும் ஜோடிகளை தான் பார்க்கும் போதெல்லாம் மனம் சபலப்பட்டது என்றும், தானும் இப்படி எல்லாம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் போய் விட்டோமே என்று வருந்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இப்போது, அரசியலில் ஈடுபட்டு பலவிதமாக பேச்சுக் கேட்டுக் கொண்டிருப்பவர் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்திதான். எனவே, தில்லியில் பேசிய நிகழ்ச்சியில், மறைமுகமாக ராகுலுக்கான அட்வைஸ் இது என்கிறார்கள்!