கருணாநிதியின் மருமகள்கள் எப்படி? வெளியானது சுவாரஷ்ய தகவல்கள்

By sathish kFirst Published Sep 10, 2018, 1:36 PM IST
Highlights

திருவாரூர் தொகுதியில, உங்க அப்பா நின்ன இடத்துல சுயேட்சையா நில்லுங்க. நம்ம குடும்பமே பிரச்சாரத்துக்கு வந்து மக்கள்ட்ட நியாயம் கேட்போம். உங்க தம்பி, மாமாவோட (கருணாநிதி) எம்.எல்.ஏ. இடத்துக்கு வேற யாருக்கோதான் பிரச்சாரம் பண்ணப்போறார். ஆனா நாங்களோ மாமாவின் மகனான உங்களுக்கு வாக்கு கேட்கப்போறோம். 

சுயேட்சை எம்.எல்.ஏ!: அழகிரி மனைவி காந்தியின்  அம்மாடியோவ் ஆசை! ‘வாரிசு அரசியல் நடத்துகிறார்’ என்று ஆயிரம்தான் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தாலும் கூட தன் மனைவி மற்றும் துணைவி இருவரையும் கட்சி விஷயத்தினுள் பெரிதாய் தலையிட அனுமதித்ததில்லை கருணாநிதி. ராசாத்தியம்மாள் கூட தன் மகள் கனிமொழியின் வளர்ச்சிக்காகவும், ஸ்டாலினின் தடை தாண்டியும் தங்களை ஆதரிக்கும்  சில நிர்வாகிகளின் வாய்ப்புக்காகவும் கருணாநிதியிடம் பேசிப்பார்ப்பார், மென்மையாக போராடுவார். ஆனால் தயாளு அம்மாளோ கட்சி விஷயத்தில் கப்சிப்!தான். 

சில வருடங்களுக்கு முன் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய நேரம். ஈரோடு  தொகுதியில் யாரை நிறுத்தலாமென்று ஆராய்ந்த நேரத்தில், சுப்புலட்சுமி ஜெகதீசன் வாய்ப்பு கேட்டார். ஆனால் அது கருணாநிதியின் கவனத்தை ஈர்க்கவில்லை. விளைவு, கோபாலபுரம் வீட்டின் உள்ளே சென்று தயாளு அம்மாவிடம் குசலம் விசாரித்தபடியே, தனது வேண்டுகோளையும் செருகிவிட்டார் சுப்பு. தயாளு அம்மாளும் அவருக்கு சிபாரிசு செய்யும் நோக்கில் கருணாநிதியிடம் பேச, ‘என்ன கிச்சன் பாலிடிக்ஸ் நடக்குதா இங்கே?’ என்று ஒரே போடாக போட்டார் கருணாநிதி. 

இதுதான் தி.மு.க.வின் தலைவர், தனது தலைவிகளுக்கு கட்சியில் கொடுத்து வைத்திருந்த அதிகாரம். அதேவேளையில் எதிர் முகாமான அ.தி.மு.க.வில் தோழி சசிகலாவுக்கு தனது கட்சியில் எந்தளவுக்கு முக்கியத்துவத்தை ஜெயலலிதா கொடுத்து வைத்திருந்தார் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. 

ஆனால் தீவிர அரசியலில் கால் பதித்த கருணாநிதியின் மகன்களின் மனைவிகள் எப்படி?...

ஸ்டாலினின் மனைவி துர்காவை பொறுத்தவரையில் நேரடி அரசியலுக்குள் வரமாட்டார். ஆனால் பல காலமாக ஸ்டாலினின் ஒவ்வொரு அரசியல் மூவ்வையுமே கவனித்தும், ரசித்தும் கொண்டிருப்பவர் அவர். ஸ்டாலினின் அரசியல் மூவ்கள் வெற்றி பெற வேண்டுமென்று கோயில் கோயிலாக ஏறி இறங்குவதும், பிரச்னைகளுக்கு ஏற்ப பரிகார ஸ்தலங்களை தேடிச்சென்று பிராயசித்தம் செய்வதும் துர்காவின் அசராத பணி. ஸ்டாலினை தமிழக முதல்வராக பார்க்க வேண்டும்! என்பதுதான் துர்காவின் ஒரே இலக்கு. 

தங்கள் கட்சி நடத்தும் மாநாடுகளில் முன் வரிசையில் தன் நார்த்தனார் செல்வியுடனோ அல்லது தனது சகோதரிகளுடனோ துர்காவை பார்க்கலாம். மாமனார் பேச்சிலிருந்து தனது மணாளன் பேச்சு வரை எல்லாவற்றையும் உற்றுக் கவனிப்பார்.

துர்காவின் சிபாரிசு வழியாக பதவியையோ, தேர்தல் சீட்டையோ பெற்றவர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் சில வேட்பாளர்களை பற்றிய  கருத்துக்களை மிக தெளிவாக ஸ்டாலினிடம் எடுத்துக்கூறுவார். அது மிக துல்லியமாக இருக்கும். 

இப்போது கருணாநிதி இறந்து, ஸ்டாலின் கழக தலைவராகிவிட்ட நிலையில் துர்காவுக்கான பொறுப்பு அதிகரித்திருக்கிறது. கூடவே மகன் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் நுழைவு போன்ற முயற்சிகளையும் தெளிவாகவே கவனித்து ஸ்ட்ரீம்லைன் செய்து கொண்டிருக்கிறார் துர்கா. தன்னை ‘பெரியம்மா! பெரியம்மா’ என்றழைத்தபடி வாஞ்சையாக சுற்றிவரும் மகேஷ்பொய்யாமொழி எம்.எல்.ஏ.வின் வழியாகத்தான் உதயநிதிக்கான அரசியல் துணிவுகளை ஃபிரேம் செய்து கொண்டிருக்கிறார் துர்கா. 
இது ஒருபுறம் இருக்கட்டும், 

கருணாநிதியின் இன்னொரு மகனான, அஞ்சாநெஞ்சன் அழகிரியாரின் மனைவி காந்தி. இவரும்  நேரடி அரசியலுக்குள் தலையிடுவதில்லை. ஆனால் துர்கா போலவே கணவரின் பின்னால் இருந்தபடி எல்லாவற்றையும் கவனிக்கக்கூடியவர். தி.மு.க. ஆளுங்கட்சியாகவும், அழகிரி மத்தியமைச்சராகவும் இருந்த காலத்தில் மதுரைதான் தென் தமிழக அரசியலின் தலைநகர். அதன் அரசர் அழகிரியின் மனைவியான காந்தி, அக்மார்க் மதுரைப் பெண்ணாக கழக மற்றும் கழகம் சார்ந்த நபர்களின் இல்ல விழாக்களில் அசத்தலாக வந்து கலந்து கொண்டதெல்லாம் சினிமாவை மிஞ்சும் சீன்கள். 

ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் நடந்து வரும் பனிப்போரின் வெளிப்பாடாக அழகிரியின் மகன் துரைதயாநிதி அவ்வப்போது வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டென வெளிப்படையாக ஏதையாவது ட்விட்டரில் போட்டு வில்லங்கத்தை இழுப்பார். இதையும் ஓரப்பார்வையில் கவனிக்க தவறுவதில்லை காந்தி. 

ஆனால் தி.மு.க.விலிருந்து கட்டம் கட்டப்பட்டு, கடந்த சில வருடங்களாக அரசியலில் சரிவை மட்டுமே அழகிரி சந்தித்துக் கொண்டிருப்பது காந்தியை மிகவும் பாதித்திருக்கிறது. கணிசமான காலமாக மீடியா வெளிச்சத்துக்கே வராத காந்தி, கருணாநிதியின் இறுதி சடங்கின்போது சீனுக்குள் வந்தார். ‘காந்தியா இது?’ என்று பலர் அதிரும் வண்ணம் சோர்வின் வடிவமாகவே இருந்தார். 

அழகிரியின் அரசியல் எழுச்சிக்காக நாள்தோறும் வீட்டில் பூஜை வைத்துக் கொண்டிருக்கிறார் காந்தி. துர்கா போல் காந்திக்கு தன் கணவர் தமிழக முதல்வராக வேண்டும்! எனும் எண்ணமெல்லாம் ’இப்போதைக்கு’ இல்லை. ஆனால் தி.மு.க.வில் பழைய இடத்தை அவர் மீண்டும் பெற வேண்டும் எனபதே காந்தியின் ஆசை. ஆனால் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் இணைக்க  ஸ்டாலின் மெளனித்து வருவது காந்தியை மேலும் டல்லடிக்க வைத்துள்ளது. 

இந்நிலையில்தான் அழகிரியிடம் ‘எம்.எல்.ஏ. ஆகுற வழியை பாருங்க’ என்று ஒரு உபாயத்தை சொல்லியிருக்கிறார் காந்தி! என்கிறார்கள் விபரமறிந்தோர். ஜெ., இறப்புக்கு பின் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றியை சுட்டிக்காட்டி, ‘சில வருடங்களுக்கு முன்னாடி உங்களுக்கு இருந்த அரசியல் அதிகாரத்தில் ஒரு பர்சன்டேஜ் கூட இவருக்கு இருந்ததில்லை. ஆனால் இன்னைக்கு புரட்சி பண்ணி இவரு ஜெயிச்சிருக்கார். 

அப்படின்னா உங்களாலே ஏன் முடியாது? திருவாரூர் தொகுதியில, உங்க அப்பா நின்ன இடத்துல சுயேட்சையா நில்லுங்க. நம்ம குடும்பமே பிரச்சாரத்துக்கு வந்து மக்கள்ட்ட நியாயம் கேட்போம். உங்க தம்பி, மாமாவோட (கருணாநிதி) எம்.எல்.ஏ. இடத்துக்கு வேற யாருக்கோதான் பிரச்சாரம் பண்ணப்போறார். ஆனா நாங்களோ மாமாவின் மகனான உங்களுக்கு வாக்கு கேட்கப்போறோம். மக்கள் நிச்சயம் உங்க மேலே அனுதாபப்படுவாங்க, 

நிச்சயம் ஜெயிப்பீங்க.” என்று ஆதங்கத்துடன் பேசி தூண்டியிருக்கிறாராம். மனைவி காந்தியின் கருத்திலுள்ள ஆழத்தையும், நியாயத்தையும் அழகிரி புரிந்து கொண்டிருக்கிறார் என்பதே இறுதிகட்ட தகவல்.

click me!