காங்கிரஸ் கட்சியை விட்டு ஏன் வந்தேனோ... ஜி.கே. வாசனின் தளபதி சொல்வதைப் பாருங்கள்!

By Asianet TamilFirst Published Mar 18, 2019, 10:16 AM IST
Highlights

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி வந்ததற்காக வருத்தப்படுகிறேன் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் தமாகா போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மூப்பனார் இருந்தபோது தமாகாவுக்கு இருந்த மதிப்பு, மரியாதை எல்லாம் இப்போது இல்லாமல் போய்விட்டது என்ற கருத்து பொதுவெளியில் தொடர்ந்து வைக்கப்பட்டுவருகின்றன. ஒரு தொகுதி பெறும் அளவுக்கு தமாகா சுருங்கிவிட்டதா என்ற கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் எழுப்பப்படுகின்றன. இந்நிலையில் அக்கட்சியின் மூத்தத் தலைவர் ஞானதேசிகன்  இதுபோன்ற கேள்விகளுக்கு தனியார் தொலைக்காட்சியில் பதில் கூறியிருக்கிறார்.
“தமாகா சுருங்கிவிட்டது என்பதை ஏற்க முடியாது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைவிட தமாகா பலமாக இருக்கிறது. இதை அடித்து சொல்ல முடியும். தமிழகத்தில் பல போராட்டங்களை தாமாக தொடர்ந்து நடத்திவருகிறது. மக்களுடன் நெருக்கமாக இருந்துவருகிறது. இந்த செயல்பாடுகளை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பது என் கருத்து. 
அதிமுக - பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக வாசன் தனித்து முடிவெடுக்கவில்லை. கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசினார். நான் என்னுடைய கருத்துகளை வாசனிடம் எடுத்துச் சொன்னேன். ஆனால், நான் என்ன சொன்னேன் என்பதை என்னால் ஊடகத்திடம் சொல்ல முடியாது. எல்லோரிடம் பேசிய பிறகே தலைவர் யோசித்து ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.
 காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்ததற்காக வருத்தப்படாமல் இருக்க முடியாது. ஆனால், விசுவாசத்தின் காரணமாக தமாகாவுக்கு வந்தேன். காங்கிரஸ் கட்சியோடு இணைந்து செயல்பட அக்கட்சி ஏன் அழைக்கவில்லை என்பது தெரியவில்லை. இதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.” என்று ஞானதேசிகன் தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் நெருங்கிவரும் வேளையில் அக்கட்சியின் மூத்தத் தலைவர் ஞானதேசிகன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி வந்ததற்காக வருத்தமும், விசுவாசத்தின் காரணமாக தமாகா வந்ததாகவும் கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து ஞானதேசிகன் விலகியபோது, அவர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தார்.

click me!