தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாற்றம்... பாமக மூத்த தலைவரின் தேர்தல் பயணம்!

By Asianet TamilFirst Published Mar 18, 2019, 8:50 AM IST
Highlights

தேர்தலுக்கு தேர்தல் ஒவ்வொரு தொகுதியாக மாறும் நிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் பாமகவின் மூத்த தலைவருமான ஏ.கே. மூர்த்தி தள்ளப்பட்டிருக்கிறார். 
 

பாமகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துவரும் ஏ.கே. மூர்த்தி 1999-ம் ஆண்டில் செங்கல்பட்டு நாடாளுமன்றத் தொகுதியில் முதன்முறையாகப் போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டார். அந்தக் காலகட்டத்தில்தான் வாஜ்பாய் அமைச்சரவையில் ரயில்வே இணை அமைச்சராக ஏ.கே. மூர்த்தி பணியாற்றி பெயர் பெற்றார். 2004-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டார் ஏ.கே. மூர்த்தி. ஆனால், அ. வேலுவுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததால், ஏ.கே. மூர்த்தியால் அமைச்சராக முடியவில்லை. 
இதற்கிடையே தொடர்ச்சியாக 1999-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை பத்து ஆண்டுகள் எம்.பி.யாக இருந்த ஏ.கே. மூர்த்திக்கு, கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்துக்கு செல்ல வாய்ப்பும் கிடைக்கவில்லை. 2009-ம் ஆண்டுக்கு பிறகு செங்கல்பட்டு தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்டதால், வெவ்வேறு தொகுதிகளுக்கு மாறும் சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு நாடளுமன்ற தொகுதியில் இருந்த பெரும்பாலான பகுதிகள் காஞ்சிபுரம் தொகுதிக்கு மாறின. ஆனால், காஞ்சிபுரம் தனித் தொகுதியாக மாற்றப்பட்டதால், கடந்த 2009-ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஏ.கே. மூர்த்தி போட்டியிட்டார். ஆனால், டி.ஆர்.பாலுவுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்திய அவர், 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அணியில் ஸ்ரீபெரும்புதூர் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், ஆரணி  தொகுதிக்கு ஏ.கே. மூர்த்தி மாறினார். ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வீசிய அலையிலும் திமுகவுக்கு இணையாக சுமார் இரண்டேல் கால் லட்சம் வாக்குகளை வாங்கி தோல்வியடைந்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆரணி தொகுதியை அதிமுக எடுத்துக்கொண்டுவிட்ட நிலையில், தற்போது அரக்கோணம் தொகுதிக்கு மாறியிருக்கிறார் ஏ.கே. மூர்த்தி. 2009, 2014, 2019 என மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ஏ.கே. மூர்த்தி வெவ்வேறு தொகுதிக்கு மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா தொகுதிகளும் பழைய செங்கல்பட்டு தொகுதிக்கு பக்கத்து தொகுதிகள்தான் என்றாலும், கூட்டணிக்கு தொகுதி ஒதுக்கப்படுவதை கருதியோ வெற்றி வாய்ப்பை கருதியோ ஏ.கே. மூர்த்தி வெவ்வேறு தொகுதிகளுக்கு மாற வேண்டியிருக்கிறது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் ஏ.கே. மூர்த்தி தோல்வியடைந்த நிலையில், இந்தத்  தேர்தலில் திமுகவின் பலமான கையான ஜெகத்ரட்சகனை எதிர்த்து போட்டியிடுகிறார். 
இந்தத் தேர்தலிலாவது விட்டதைப் பிடிப்பாரா ஏ.கே. மூர்த்தி?
 

click me!