கஜா புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் !! 85 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாயாக உயர்வு !!

By Selvanayagam PFirst Published Jan 4, 2019, 1:16 PM IST
Highlights

கஜா புயலால் பாதிக்கப்ட்ட படகுகளுக்கு நிவாரண நிதியாக 85 ஆயிரம் ரூபாய்  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  அதனை 1 லட்சத்து 50 ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதி நள்ளிரவு கஜா  புயல் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இந்த புயல் ஆடிய கோர தாண்டவத்தில் நாகை ,திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் லட்சக்கணக்கான தென்னை, மா,பலா உள்ளிட்ட மரங்கள் சாய்ந்தன. கிட்டத்தட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதமடைந்தது.

விவசாயிகள் ஒரு புறம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்ட்டனர். மீனவர்கள் கடற்கரையில் நிறுத்தியிருந்த படகுகள் ஒன்றுடன்  ஒன்று மோதியும், கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டும் சேதமடைந்தன.

நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் நூற்றுக்கணக்கான படகுகள் இந்த புயலால் கடுமையாக சேதமடைந்தன.

இதையடுத்து சேதமடைந்த படகுகளுக்கு 85 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்படும் என தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில்  தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயலால் பாதிக்கப்ட்ட படகுகளுக்கு நிவாரண நிதியாக 85 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  அதனை 1 லட்சத்து 50 ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

click me!