இதோ அடுத்த கோரிக்கை... இந்த இரு மாவட்டங்களைப் பிரியுங்கள்... ஜி.கே. வாசனும் கோதாவில் குதித்தார்!

By Asianet TamilFirst Published Jul 20, 2019, 7:27 AM IST
Highlights

திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டமும் காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும் என 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். இதன் மூலம் இப்பகுதி மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். 

தஞ்சாவூரையும் வேலூரையும் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.
 திருநெல்வேலியைப் பிரித்து தென்காசி மாவட்டமும் காஞ்சிபுரத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து மேலும் பல மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என அரசுக்கு கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழகத்தை 60 மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி  தலைவர் அன்புமணி தெரிவித்தார். ஈரோட்டையும் கோவையையும் பிரித்து தனி மாவட்டங்கள் உருவாக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் தஞ்சாவூரையும் வேலூரையும் பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டமும் காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும் என 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். இதன் மூலம் இப்பகுதி மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். அதுபோல தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து கும்பகோணம் மாவட்டத்தை உருவாக்க வேண்டும். அதிக மக்கள் தொகை கொண்ட வேலூரைப் புதிய மாவட்டம் ஒன்றையும் உருவாக்க வேண்டும். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.


மேலும் அவர் கூறுகையில், “தமிழகத்தில் நீர் ஆதாரங்களைப் பெருக்க தமிழக அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதற்காகக் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது. அரசின் திட்டங்களுக்கு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நீர் வளத்தைக் காக்க துணை நிற்க வேண்டும். தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தமாகா ஆதரவு அளித்தது. இப்போது நடக்கும் வேலூர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கே தமாகா ஆதரவு அளிக்கும். ஏ.சி. சண்முகம் வெற்றிக்கு  தமாகா நிர்வாகிகள் பாடுபடுவார்கள்” என்று ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

click me!