காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 7500 கனஅடி நீர் திறப்பு !! கனமழையால் கூடுதல் தண்ணீர் திறப்பு !!

By Selvanayagam PFirst Published Jul 19, 2019, 10:55 PM IST
Highlights

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு கே.ஆர்.எஸ். அணையில் இருந்து விநாடிக்கு .  2,500 கனஅடி திறக்கப்பட்டு வந்த நிலையில் மழையால் 5,000 கனஅடியாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல் கபினி அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 500 கனஅடியில் இருந்து 2,500 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நடந்தபோது, காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மழைக்காலத்தில் அணைக்கு நீர்வரத்து வரும்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் கடந்த 8ம் தேதி மண்டியா மாவட்ட கரும்பு விவசாயிகள் முதல்வர் குமாரசாமியை விதானசவுதாவில் சந்தித்து பேசினர். அப்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. போதிய நீரில்லாமல் பயிர்கள் வாடும் நிலைக்கு வந்துள்ளதால் அதை காப்பாற்ற உடனடியாக கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

அதை தொடர்ந்து முதல்வர் குமாரசாமி கடந்த 9ம் தேதி ட்விட்டரில் பதிவு செய்த செய்தியில், ‘’தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதித்தும், மண்டியா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்’’ என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்திருந்தார்.

ஆனால் முதல்வர் உத்தரவிட்டும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறக்காமல் அதிகாரிகள் அலட்சியம் செய்தனர். இதனால் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். 

இந்த நிலையில் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறித்து நீர்பாசன துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சி.எஸ்.புட்டராஜி கடந்த 15ம் தேதி ஆலோசனை நடத்தினார். அதில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள அணைகளில் தற்போதுள்ள நீரின் அளவு, தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும் என்பது உள்பட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

இறுதியாக கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கேஆர்எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 5000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

இதே போல் கபிணி அணியில் இருந்து விநாடிக்கு 2500 கனநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

click me!