1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள்... அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Sep 7, 2021, 6:24 PM IST
Highlights

தமிழகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
 

தமிழகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

 மின்சாரத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அவர், மின்துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய செந்தில்பாலாஜி, புதிய மின்இணைப்புகள் வழங்கி விவசாயிகளின் நலனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். தமிழக சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை நடைபெற்றது. அதில் அதிமுக உறுப்பினர் தங்கமணி, அதிமுக ஆட்சியில் கொரோனா காலகட்டத்தில் முந்தைய மாத கட்டணத்தை செலுத்தலாம் அல்லது புகைப்படம் எடுத்து அனுப்பி மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவித்தோம். ஆனால் திமுக ஆட்சியில் கடந்தாண்டு அதே மாத கட்டணத்தை செலுத்த சொன்னதால் மக்கள் பாதிக்கப்பட்டதாக தங்கமணி தெரிவித்தார்.

இதற்கு மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், திமுக ஆட்சியில் மின் கட்டணங்களை மக்கள் செலுத்த மூன்று வாய்ப்புகள் கொடுக்கப் பட்டது. அதாவது கடந்த மாதம் கட்டணம், கடந்தாண்டு கட்டணம், மொபைலில் புகைப்படம் எடுத்து அனுப்புவது என மூன்று வாய்ப்புகளை பயன்படுத்தி மொத்தம் 14.69 லட்சம் பேர் மின் கட்டணம் செலுத்தியுள்ளனர் என செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

2020 ஜூலை மாதம் மொத்தம் மின் நுகர்வு 3023 மில்லியன் யூனிட். இதற்கு வசூலிக்கப்பட்ட தொகை 789 கோடி. அதே 2021 ஜூலை மாதம் மொத்தம் மின் நுகர்வு 4494 மில்லியன் யூனிட். கடந்தாண்டைவிட 1471 மில்லியன் யூனிட் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 48 சதவீதம் பயன்பாடு உயர்ந்திருந்தாலும் வசூலிக்கப்பட்ட தொகை 869 கோடி மட்டுமே.

 

கடந்தாண்டை விட 48 சதவீதம் பயன்பாடு அதிகரித்திருந்த போதும் 10 சதவீதம் அதாவது 80 கோடிதான் கூடுதலாக வசூலிக்கப்பட்டது. அது போல் 2020 ஆகஸ்ட் மாதம் மின் பயன்பாடு 3035 மில்லியன் யூனிட். இதற்காக 751 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. 2021 ஆகஸ்ட் மாதம் மின் பயன்பாடு 4012 மில்லியன் யூனிட் ஆகும். இதற்கு வசூலிக்கப்பட்ட தொகை 789 கோடி ஆகும்.

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2021 ஆகஸ்ட் மாதத்தில் 987 மில்லியன் யூனிட் அதாவது 32 சதவீத அதிக பயன்பாடு இருந்தாலும் 22 கோடி மட்டும்தான் கூடுதல் கட்டணம், அதாவது 3 சதவீதம் தான் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார். 
 

click me!