பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் தேவையற்றது... சீமான் சொல்லும் காரணம் என்ன தெரியுமா..?

By Asianet TamilFirst Published Aug 28, 2021, 9:36 PM IST
Highlights

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என அரசு அறிவித்தது தேவையற்றது என்று நாம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 

நெல்லையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் சிறப்பு முகாம்களை மூட வேண்டும். க்யூ பிரிவு காவல் துறையையே கலைக்க வேண்டும். தமிழகத்தில் சிறப்பு முகாம்களை அமைத்தது முன்னாள் முதல்வர் கருணாநிதிதான்.  இலங்கை தமிழர்களுக்கு அறிவித்த திட்டங்கள் மிகவும் கால தாமதமானது. என்றாலும் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். காங்கிரஸ், பாஜக தலைமையில் மத்தியில் அமைந்த அரசுகள் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமையை வழங்க மறுக்கின்றன. ஆனால், திபெத் மக்களுக்கு பல சலுகைகள் வழங்குகிறார்கள்.
இலங்கை தமிழர்களை சட்டத்துக்கு புறம்பாக குடியேறியதாக  சொல்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமையை வழங்க வேண்டும். திராவிட கட்சிகளின் ஆட்சி என்பதே மக்களை ஏமாற்ற மட்டும்தான். அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் பாடப் புத்தகங்களிலும் பைகளிலும் இடம்பெறுவது தேவையற்றது. புத்தகப் பையில் முன்னாள் முதல்வர்கள் படங்கள் இருப்பதை எடுக்க வேண்டாம் என முதல்வர் கூறியிருப்பது அரசியல் நாகரிகத்தைக் காட்டுகிறது.  நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ் கட்சிதான். அதை ஆதரித்தது திமுக. நீட்டை எதிர்த்து மக்கள் போராட்டம், கிளர்ச்சி நடத்தியதால் திமுக எதிர்க்க தொடங்கியது. 
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மூலம் மக்களை சராசரி வாழ்கைக்கு கொண்டுவர அரசு முயற்சி செய்கிறது. ஊரடங்கை மக்களும் விரும்பவில்லை. பெருந்தொற்று நோயை விட முடக்கம் மக்களை மிகவும் பாதிக்கிறது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என அரசு அறிவித்தது தேவையற்றது. கட்டணம் குறைப்பு செய்திருக்கலாம். இலவசம் தேவையில்லை. தமிழகத்தில் ரூ.5.70 லட்சம் கோடி கடன் என அரசு சொல்கிறது. அந்தக் கடன் எப்படி ஏற்பட்டது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.” என்று சீமான் தெரிவித்தார்.

click me!