7 வருஷமா மோடியால் முடியல... 100 நாளில் ஸ்டாலின் செஞ்சிட்டாரு... உச்சி குளிரும் கே.எஸ். அழகிரி.!

By Asianet TamilFirst Published Aug 28, 2021, 9:20 PM IST
Highlights

கடந்த 7 ஆண்டுகளாக பெட்ரோல் வரியை மோடியால் குறைக்க முடியவில்லை. ஆனால், ஸ்டாலின் அதனை குறைத்துள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். 
 

கன்னியாகுமரியில் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனைக் குழுக்களை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. தேர்தலில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் அடுத்த வாரம் முதல் சுற்றுப் பயணம் செய்ய உள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது.
திமுக 100 நாள் ஆட்சியில் எதையும் செய்யவில்லை என அதிமுக சொல்வது தவறு. தற்போதைய பொருளாதார சூழ்நிலை என்ன என்பதை தமிழக நிதியமைச்சர் வெள்ளை அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி உள்ளார். என்றாலும்  தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என நிதியமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக உறுதியாக உள்ளது.  
கடந்த 7 ஆண்டுகளாக பெட்ரோல் வரியை மோடியால் குறைக்க முடியவில்லை. ஆனால், ஸ்டாலின் அதனை குறைத்துள்ளார். இதற்காக காங்கிரஸ் கட்சி திமுகவின் ஆட்சியைப் பாராட்டுகிறது. கொடநாடு விவகாரத்தை விசாரிப்பதில் எந்த தவறும் இல்லை. கொடநாடு விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணையில் எந்த உள்நோக்கமும் கிடையாது. கொடநாடு விசாரணை நடைபெறுவதற்கு எதிர்க்கட்சிகள் அஞ்ச தேவையில்லை” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். 

click me!