இதெல்லாம் அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம்... முதல்வர் மு.க.ஸ்டாலினின் முடிவுக்கு அண்ணாமலை அட்டாக்.!

By Asianet TamilFirst Published Aug 28, 2021, 9:02 PM IST
Highlights

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது​அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம் என்பது மக்களுக்குத் தெரியும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக அல்லாத மாநில அரசுகள் சில, வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றின. தமிழகத்திலும் அதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்ற திமுக வலியுறுத்தியது. ஆனால், வேளாண் சட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவு அளித்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும், அச்சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.
அதன்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை இன்று கொண்டு வந்து நிறைவேற்றினார். இத்தீர்மானத்துக்கு பாமக, காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இத்தீர்மானத்தை எதிர்த்து பாஜகவும் அதிமுகவும் வெளிநடப்பு செய்தன. இந்நிலையில் இதுதொடர்பாக  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். 
அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராகத் திமுக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் இன்று வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழக விவசாயிகள் எவரும் இந்தச் சட்டங்களை எதிர்க்காதபோது, உண்மையில் மகிழ்ச்சியுடன் வரவேற்கும்போது, ​​தமிழக மக்களுக்கு இது அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம் என்று தெரியும்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

click me!