
முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிமுக தொடங்கிய காலத்தில், 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980, 1984, 2001ஆம் ஆண்டு தேர்தல்களில் சங்ககிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, தொகுதி மறுசீரமைப்பை அடுத்து 2011ம் ஆண்டில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டப்பேரவையின் துணைத் தலைவராகப் பதவி வகித்த இவர் சட்டப்பேரவைத் தலைவர் ஜெயக்குமார் பதவி விலகியதை அடுத்து அக்டோபர் 10ம் தேதி 2012ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையின் 19வது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முன்னாள் சபாநாயகர் தனபால் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக மருத்துவர்களிடம் பேசி உடல் நலன் குறித்து கேட்டறிந்தார்.