பாகிஸ்தானின் கோதுமை, சர்க்கரை, நெய் எல்லாம் உண்டு கொழுத்த பெருச்சாளியாக இருப்பது இம்ரான் கான் தான் என்று முன்னாள் பிரதமர் நவாஸ்ஸின் மனைவி மரியம் நவாஸ் சாடியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி:
அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அத்தியாவசிய உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும் நாட்டில் கடுமையான பணவீக்கம் சூழல் நிலவி வருகிறது. இதனால் நாட்டின் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் பதவி விலக மறுத்த நிலையில், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான நோட்டீஸை நாடாளுமன்ற செயலரிடம் கடந்த 8-ம் தேதி எதிர்க்கட்சிகள் வழங்கின. ஆனால் நாடாளுமன்ற கீழ் அவையில் ஆளும் கட்சிக்கு போதிய பலம் இருந்ததால், இந்த தீர்மானம் மூலம் இம்ரான் கான் அரசை கவிழ்க்க முடியாத நிலைமை இருந்து வந்தது.
நம்பிக்கை இல்லா தீர்மானம்:
ஆனால், திடீர் பல்டியாக, எதிர்க்கட்சிகளின் கூட்டு முயற்சியால் இம்ரான் கான் அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த சில கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன.இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் நிறைவேறினால், இம்ரான் கான் அரசு கலைக்கப்படு, அவர் பதவி விலக வேண்டும்.
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு:
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத்தொடர் தொடங்கியதும், ஆளுங்கட்சி எம்.பி. ஒருவர் உயிரிழந்தற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வாக்கெடுப்பு நடைபெறவிருந்த சூழலில், எம்.பி.யின் இறப்புக்கு அஞ்சலி தெரிவிக்கும் விதமாக வரும் திங்கள்கிழமை மாலை 4 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அவை தலைவர் அறிவித்தார்.
ஆட்சி கவிழ்ப்பு.?
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கப்பட்டதால், தற்காலிகமாக இம்ரான் கான் அரசு தப்பியது. இந்நிலையில் இன்று இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வருகின்றன. 172 உறுப்பினர் ஆதரவுடன் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ள ஆளும் கட்சிக்கும் தற்போது 155 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
இம்ரான் கானின் சொந்த கட்சியில் உள்ள எம்.பிக்கள் சிலரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போதைய அரசு கவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்லாமாபத்தில் பிரமாண்ட பொது கூட்டத்தை நடத்திய இம்ரான் கான், முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோரை ஊழல் பெருச்சாளிகள் என்று சாடினார்.
கொழுத்த பெருச்சாளி:
கடந்த 30 ஆண்டுகளில் பாகிஸ்தானில் சொத்துகளை கொள்ளையடித்து வெளிநாடுகளில் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருவதாகவும் இம்ரான் கான் குற்றம் சாட்டினார். இந்நிலையில் இம்ரான் கான்னின் இந்த பேச்சிற்கு பதிலடி கொடுத்துள்ள நவாஸ் மனைவியான மரியம் நவாஸ், பாகிஸ்தானின் கோதுமை, சர்க்கரை, நெய் எல்லாம் உண்டு கொழுத்த பெருச்சாளியாக இருப்பது இம்ரான் கான் என்று கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு பாகிஸ்தான் அரசியல் களத்தை மேலும் சூடேற்றியுள்ளது.