பகுத்தறிவு பேசும் திமுக...! பவுர்ணமி தினத்தில் வேட்பாளர் பெயரை அறிவித்தது ஏன்? ஜெயக்குமார் கேள்வி

By Ajmal KhanFirst Published May 16, 2022, 12:31 PM IST
Highlights

ராஜ்யசபா தேர்தல் அடுத்த மாதம் 10 ஆம் நடைபெறவுள்ள நிலையில், திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று திமுக தலைமை அறிவித்துள்ளது. பகுத்தறிவு பேசும் திமுக பெளர்ணமி தினத்தில் வேட்பாளர் பெயரை வெளியிட்டது ஏன் என்ற கேள்வியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எழுப்பியுள்ளார்.
 

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நாடு முழுவதும் காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கு வருகிற ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனையடுத்து தமிழத்தில் உள்ள கட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதன் படி  திமுக சார்பாக 4 பேரையும் அதிமுக சார்பாக 2 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்தநிலையில் திமுக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பெயரை நேற்று திமுக தலைவரும் முதலமைச்சரும் வெளியிட்டிருந்தார். 

பவுர்ணமி தினத்தில் திமுக வேட்பாளர் பட்டியல்

இந்தநிலையில் இதனை விமர்சிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்,  திமுக ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் தமிழகத்தில் ஓடும் என வாக்குறுதிகளை அள்ளி வீசியதாக தெரிவித்தார்.  நீட் தேர்வு இருக்காது, மாதம் ஒருமுறை மின்சார கணக்கு எடுக்கப்படும், மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை போன்ற பல வாக்குறுதிகளை அளித்ததாக தெரிவித்தார். கொடுத்த வாக்குறுதிகளில் எதையாவது ஒன்றை திமுக நிறைவேற்றியுள்ளதா? என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொற்காலம் - திமுக ஆட்சி கற்காலம் என கூறினார். தமிழகம் பின்னோக்கி சென்றுவிட்டதாக கூறிய அவர்,  திமுக ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாக தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களின் கோபம் வெளிப்படும் எனக்கூறினார். மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய 10 நாட்கள் உள்ள நிலையில் முன் கூட்டியே வேட்பாளர்கள் பெயரை திமுக அறிவித்து ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். பகுத்தறிவு பேசும் திமுக பவுர்ணமி தினத்தில் வேட்பாளர் பெயரை அறிவித்துள்ளதாகவும் அப்போது அவர் விமர்சித்தார்.

click me!