மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்.. சசிகலா உள்பட 500 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் அதிரடியாக வழக்கு பதிவு..!

By vinoth kumarFirst Published Jun 30, 2021, 10:54 AM IST
Highlights

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் பேரில் சசிகலா உள்பட 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் பேரில் சசிகலா உள்பட 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று வெளியே வந்த சசிகலாவிற்கு வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததையடுத்து அதிமுகவில் பெரும் அரசியல் மாற்றம் ஏற்படும் எதிர்பார்த்த நிலையில் திடீரென அரசியலிலிருந்து விலகுவதாகத் தேர்தலுக்கு முன்பு சசிகலா அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததையடுத்து கடந்த மாதம் இறுதியிலிருந்து தொண்டர்களிடமும், கட்சி பிரமுகர்களிடமும் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, சசிகலாவுக்கு, ஆதரவாகவும் எதிராகவும் அதிமுகவினரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. சசிகலா தொடர்பாக சி.வி.சண்முகம் கடும் விமர்சனம் செய்திருந்தார். 

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், ரோசணை காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர்சி.வி.சண்முகம் கடந்த 9ம் தேதி அளித்த புகாரில், கடந்த 7ம் தேதி நான் அரசியல் ரீதியாக சசிகலா குறித்து சில கருத்துகளை ஊடகம் வாயிலாக பேட்டி அளித்தேன்.  அதற்கு சசிகலா நேரடியாக பதில் அளிக்காமல் தன் அடியாட்களை வைத்து கைபேசி மற்றும் வாட்ஸ்அப், டுவிட்டர், பேஸ்புக், வாயிலாக கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இன்றுவரை 500 பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.  

இந்த கொலை மிரட்டல் மற்றும் செயல்பாடுகளுக்கு காரணம் சசிகலா தூண்டுதல்தான்.  சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் 506(1), 507 சட்டப் பிரிவில் யார் என்று தெரியாமல் மிரட்டுவது, 109 குற்றத்திற்கு உடந்தையாக இருந்து மற்றவர்களை வைத்து மிரட்டுவது, 67 தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

click me!