
மதுரையில் பொழுது போக்கு இல்லை
வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க அமைச்சராக இருந்த போது செல்லூர் ராஜூ, தெர்மாகோலை மிதக்க விட்டார். இது பெரும் சர்ச்சையானது. இதற்கு பிறகு செல்லூர் ராஜூவை ‘‘தெர்மாகோல் விஞ்ஞானி’’என சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டார். இதனையடுத்து யார் என்னை கிண்டல் செய்தாலும் நிச்சயமாக மதுரையை சிட்னியாக, மெல்போர்னாக மாற்ற எனது எதிர்கால நடவடிக்கை இருக்கும் என குறிப்பிட்டிருந்தார். இதையும் நெட்டிசன்கள் மீம்ஸ்கள் போட்டு அசத்தி வந்தனர். இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது மதுரையில் மக்கள் பொழுது போக்கு தொடர்பாக செல்லூர் ராஜூ கேள்வி ஒன்றை எழுப்பினார்.
மதுரைக்கே சிறந்த பொழுது போக்கு செல்லூர் ராஜூ
அந்த கேள்வியில், மதுரையின் மெரினாவாக மாரியம்மன் கோயில் தெப்பகுளம் இருப்பதாகவும், இங்கு லேசர் ஷோ நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இளைஞராக இருக்கிறார் எனவே இந்த கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது பதில் அளித்த சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், மதுரையில் சுற்றுலா தலங்கள் அமைப்பது தொடர்பாக அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, மதுரையில் 20 லட்சம் பேர் இருப்பதாவும், பொழுது போக்குவதற்கு எந்த அம்சம் இல்லை என்று தெரிவித்தார்.அப்போது குறுக்கிட்டு பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லூர் ராஜூ என்பது நாட்டுக்கே தெரிந்த ஒன்று என்று தெரிவித்தார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.