பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புகளால் மாணவர்கள் குழப்பம்... முற்றுப்புள்ளி வைக்க மநீம வலியுறுத்தல்!!

Published : May 06, 2022, 03:06 PM IST
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புகளால் மாணவர்கள் குழப்பம்... முற்றுப்புள்ளி வைக்க மநீம வலியுறுத்தல்!!

சுருக்கம்

குழப்பங்கள் இல்லாது தெளிவாக மற்ற துறைகளின் ஒருங்கிணைப்போடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. 

குழப்பங்கள் இல்லாது தெளிவாக மற்ற துறைகளின் ஒருங்கிணைப்போடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறையில் தொடரும் குழப்பங்களால் மாணவர்கள் படும் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வராதா என மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்புகிறது. கடந்த வாரம் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி, வரும் மே 6 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதிக்குள் இறுதித் தேர்வுகள் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானது. பெரும்பாலான அரசு பள்ளிகள் நேற்றைய தினமான மே 5 முதல் இறுதித் தேர்வுகளை துவக்க திட்டமிட்டு பள்ளி மாணவர்களுக்கும் அறிவித்துவிட்டார்கள். இதற்கிடையே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் தேர்வு எழுதும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் வர வேண்டாம் என்ற புதிய அறிவிப்பு 4 ஆம் தேதி வெளியானது.

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் பள்ளிகளுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை. நேற்று 5 ஆம் தேதி காலையில் தேர்வு எழுத சென்ற 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று உங்களுக்கு தேர்வு இல்லை. இன்று விடுமுறை, நீங்கள் திரும்பிச் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டு கடுமையான வெயிலில் அவர்கள் திரும்பி வந்துள்ளார்கள். மாணவர்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றும் அரசின் அக்கறை இதுதானா?. இதேபோல பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக்கு முதலில் 8 மணிக்கு வரச்சொல்லி அறிவிப்பு; பின்னர் 9 மணி என்ற மாற்றம்; முகக்கவசம் தேவையில்லை என்ற அறிவிப்பு; இரவோடு இரவாக முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு என மாற்றி மாற்றி குழப்பும் பணி சிறப்பாக நடைபெறுகிறது.

ஆனால் அதே வேளை தனியாக தண்ணீர் புட்டிகள் கொண்டு வரக்கூடாது என்ற முரணான அறிவிப்பும் இதில் உள்ளது. இந்த மாணவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட இரண்டரை வருடத்திற்கு மேல் பள்ளிக்கு செல்லாமல் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததை பள்ளி கல்வித்துறை உணர்கிறதா என தெரியவில்லை. 32,674 மாணவர்கள் நேற்று பிளஸ் 2 இறுதி தேர்வில் பங்கேற்கவில்லை என்பதிலிருந்து இதை புரிந்து கொள்ளலாம். இரண்டு ஆட்சிகளிலும்  குழப்பமே உன் பெயர்தான் பள்ளிக்கல்வித்துறையா என்ற கேள்வி மக்களிடத்தில் எழுகிறது. இனியேனும்  குழப்பங்கள் இல்லாது தெளிவாக மற்ற துறைகளின் ஒருங்கிணைப்போடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி