டெல்லியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர் முருகன், பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
டெல்லியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர் முருகன், பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை. தனகுப்பிடித்த தலைவர் பிரதமர் மோடிதான் என்று வெளிப்படையாக அறிவித்தவர். ஐ.பி.எஸ். அதிகாரி பணியை உதறி தள்ளிவிட்டு தன் சொந்த ஊருக்கு வந்த அண்ணாமலை, கிராமப் புறங்களில் மக்களின் சுயசார்பு பணிகளை மேற்கொள்ள உதவும் பணியில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார். இந்நிலையில் கட்சி தொடங்க உத்தேசித்த நடிகர் ரஜினி, தான் முதல்வராக இருக்க மாட்டேன் என்று அறிவித்தார்.
அப்போது ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அண்ணாமலை இருப்பார் என்று தகவல்கள் வெளிவரத் தொடங்கின. அண்மையில் இதுபற்றி பேட்டி அளித்த அண்ணாமலை, ரஜினியுடனான சந்திப்பு குறித்து இப்போது எதுவும் சொல்லவிரும்பவில்லை என்று தெரிவித்தார். அதேவேளையில் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். தேர்தல் அரசியலை கற்றுவருவதாக தெரிவித்திருந்த அண்ணாமலை பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், டெல்லியில் முரளிதரராவ் தலைமையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் திருக்குறளில் இறைமாட்சி அதிகாரத்தில் இடம்பெற்ற குறளை மேற்கோள் காட்டி, அக்ககுறளில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர்களுக்கும் இருப்பதாக கூறினார். மேலும் கட்சியில் ஒரு தொண்டனாக சேர்ந்திருக்கும் நான் பதவி நோக்கத்தில் கட்சியில் இணையவில்லை என்றும் கட்சி சார்பில் எடுக்கும் எவ்வகையான முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன். பாஜக கட்சியை மேலும் வலுப்படுத்த என்னால் ஆன முயற்சிகளை செய்வேன் என்றார்.