புதுக்கட்சி ஆரம்பிக்கும்... முன்னாள் தலைமைச் செயலாளர்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!!

By Raghupati R  |  First Published Jan 20, 2022, 11:41 AM IST

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் புதிய அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று அறிவித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பி.ராம மோகனராவ் நியமிக்கப்பட்டபோது கவனத்தைப் பெற்றார். ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட பி ராம மோகன ராவ் 1957ல் பிறந்தவர். வணிகம், பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர், 1985ம் ஆண்டு தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பயிற்சி அதிகாரி, உதவி மாவட்ட ஆட்சியர், கூடுதல் கலெக்டராக பணியைத் தொடங்கினார்  ராம மோகன ராவ்.,

Tap to resize

Latest Videos

1991,92 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும், 1994, 96 ஆண்டுகளில் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றினார். குடிநீர் வழங்கல் செயல் இயக்குனர், பிறபடுத்தப்பட்டோர் நல ஆணைய இயக்குநர், நெடுஞ்சாலைத் துறை செயலர், வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித் துறை தலைவர், நிர்வாக இயக்குநர், சமூக நலன் சத்துணவு திட்டத் துறை செயலர், வேளாண்மைத் துறை செயலர் தமிழக அரசில் முக்கிய பதவிகளை வகித்த இவர், 2011ம் ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சரானபோது முதலமைச்சர் அலுவலகத்தின் 2வது செயல் அலுவலராக இருந்தார். 

இதனைத் தொடர்ந்து, மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சரானபோது, தனக்கு முன்னிருந்த 18 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் தாண்டி, 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளரானார். ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து, டிசம்பர் 21, 2016ம் ஆண்டு பி. ராம மோகன ராவ் தலைமைச் செயலாளராக இருந்தபோது, சென்னை கோட்டையில் உள்ள அவருடைய அலுவலகத்திலும் வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதனால், எழுந்த சர்ச்சை காரணமாக ராம மோகன ராவ் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

வேறு பணி அளிக்கப்படாமல் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். பின்னர், மார்ச் 31, 2018ல் அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராக இருந்த நிலையில் 60 வயது நிறைவடைந்ததால் செப்டம்பர் 28, 2017ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் என்ற முக்கிய பதவி வகித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராம மோகன ராவ், ஓய்வு பெற்ற பிறகு, தெலுங்கு மொழி பேசும் சமுதாயத்தினரின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். 

அடிக்கடி அரசியல் ரீதியான கருத்துகளையும் கூறிவந்தார். இதனைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராம மோகன ராவ், விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக பேசப்பட்டது. இவர் கடந்த 1 வருடத்திற்கும் மேலாகவே பல்வேறு சமுதாயத் தலைவர்கள், இளைஞர்களை சந்தித்து வருகிறார். இதில் பல சமுதாய அமைப்பினர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அரசியல் ரீதியாகக் கிடைக்கும் முக்கியத்துவம், புறக்கணிப்பு குறித்த வரலாற்று ஆதாரங்களை முன்வைத்துப் பேசி வருகிறார்.இந்நிலையில், திருமலை நாயக்கர் மன்னர் பிறந்தநாள் விழாவில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

அப்போது பேசியர் அவர், ‘தெலுங்கு இனத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் தமிழகத்தில் இருந்தும் மன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு மரியாதை செலுத்த யாரும் வரவில்லை. இதுவரை சமுதாயம், பண்பாடு, கலாசாரத்தை ஒருங்கிணைத்து செயல்பட்டுவந்தேன், விரைவில் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளேன். அப்படி ஆரம்பிக்கும் கட்சி சாதி ரீதியாக அல்லாமல் பொதுவானதாகத் தொடங்கப்படும்’ என்று கூறினார். ஆந்திர நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியின் அரசியல் ஆலோசகராக ராம மோகன ராவ் இருக்கிறார் என்பதும் அக்கட்சி சமீபத்தில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து இருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!