அண்ணாமலை இருக்கிற வரைக்கும் பிஜேபி உருப்படாது.. பாஜகவை புரட்டி எடுத்த தயாரிப்பாளர்.

By Ezhilarasan BabuFirst Published Jan 20, 2022, 11:01 AM IST
Highlights

தமிழக முதல்வர்  எதை செய்ய வேண்டுமோ அந்த வகையில் நல்லதை செய்து கொண்டிருக்கிறார். அதேபோல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரதமர் குறித்து நையாண்டி செய்யப்பட்டிருப்பது தவறான விஷயம், இல்லாததை சொல்லி பிரதமரை அவமதிப்பது கூடாது, ஆனால் உண்மையை நாகரிகமாக சொல்ல வேண்டிய வகையில் சொல்லலாம் அந்த கருத்து சுதந்திரம் நமக்கு உள்ளது.

தமிழக முதல்வரையும் காவல்துறை அதிகாரி சைலேந்திரபாபு போன்றோரையே அண்ணாமலை குறை சொல்லுகிறார் என்றும், அவர் இருக்கும் வரை தமிழக பாஜக உருப்படாது என திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விமர்சித்துள்ளார். அரசியல் அனுபவம் குறைந்த அண்ணாமலையால் பிரதமருக்குதான் அவப்பெயர் ஏற்படுகிறது என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மழை வெள்ளத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலின் களத்தில் இறங்கி பணியாற்றியதை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் எதிர்க்கட்சியான அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் அரசை மிகக்கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதில் பாஜக ஒருபடி மேலே போய் முதல்வர் ஸ்டாலினையும் அவரது குடும்பத்தினரையும் மற்றும் தமிழக காவல்துறை டிஜிபி என பலரையும் விமர்சித்து வருகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து திமுக அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இதேநேரத்தில் பாஜகவின் ஆதரவாளர்களென சமூக வலைத்தளத்தில் திமுக அரசை விமர்சித்து வருபவர்கள் மீது எடுக்கப்படும் கைது நடவடிக்கைகளை அண்ணாமலை மிகக் கடுமையாக கண்டித்து வருகிறார். இதே நிலை தொடர்ந்தால் பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்றும், இது அரசுக்கு இறுதி எச்சரிக்கை என்றும் அவர் கூறியதுடன். 17 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்கிறது இத்தோடு மிரட்டல் நடவடிக்கைகளை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை எச்சரித்தார். அதேபோல் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு குறித்தும் அண்ணாமலை மிக கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார். அதாவது தமிழக  காவல் துறை திமுக மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கட்டுப்பாட்டில் எதுவுமில்லை. சைக்கிளிங் போவதற்கும், செல்பி எடுப்பதற்கும்தான் டிஜிபி பதவி உள்ளது.

வெளிப்படையாகவே சொல்கிறேன் காவல்துறை டிஜிபியின் கட்டுப்பாட்டுக்குள் இல்லவே இல்லை என்றும், திமுக மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில்தான் டிஜிபியும் காவல்துறையும் உள்ளது என்றார். அண்ணாமலையின் இந்த விமர்சனம் திமுக ஆதரவாளர்கள் மத்தியில் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு சைலேந்திர பாபுவே வீடியோ வெளியிட்டு சூசகமாக பதிலடியும் கொடுத்திருந்தார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிரதமர் மோடியின் திட்டங்கள் குறித்து கேலி கிண்டல் செய்யும் வகையில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதாக கூறி, அந்த தொலைக்காட்சி நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதேபோல் அந்த நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கிவர்கள் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளரை ஆகியோரும் மன்னிப்பு கேட்க வேண்டும் அதற்கு காரணமானவர்களை நிர்வாகம் பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி  தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை  அந்த தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

தமிழக பாஜகவின் இந்த நடவடிக்கையை பலரும் விமர்சித்து வருகின்றனர். கருத்துச் சுதந்திரத்தின் குரல்வலை நெறிக்கும் செயல் இது என்றும் பலரும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன், அண்ணாமலை அனுபவம் அற்றவர் அவரின் செயல்பாடுகள்  பிரதம் மோடிக்குதான் அவப்பெயரை ஏற்படுத்துகிறது என கண்டித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டை பழிவாங்கும் போக்கு அதிகமாக உள்ளது, தமிழகத்திற்கு தரவேண்டிய நிதிகளையும் முறையாக கொடுப்பதில்லை, பொங்கலுக்கு, வெள்ள நிவாரணத்திற்கு 5 ஆயிரம் வழங்கவேண்டுமென அண்ணாமலை தமிழக அரசை வலியுறுத்தி வருகிறார். ஆனால் மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய தொகையை கொடுக்காமல் வைத்திருக்கிறது. அதை ஏன் அண்ணாமலை கேட்கவில்லை. தமிழக அரசு பலமுறை கேட்டு விட்டது, ஆனால் அதை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை.

இதை மோடி சிந்தித்துப் பார்க்க வேண்டும், தமிழில் வணக்கம் சொல்கிறார், வாழ்த்து சொல்லுகிறார் அதை தமிழகம் பாராட்டுகிறது. அதேநேரத்தில் தமிழகத்திற்கான உரிமைகளையும் அவர்கள் மதிக்க வேண்டும். அதேபோல குடியரசு தின விழாவில் தமிழகத்தைச் சார்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின்  வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க 100% தமிழகத்தை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தை காட்டிலும் கர்நாடகம் அதிக தியாகம் செய்த மாநிலமா? பாஜக மாநிலங்களுக்கு இடையில் ஓரவஞ்சனை செய்கிறது  என்பது இதன் மூலம் வெளிப்படையாகவே தெரிகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தைப் பொருத்தவரையில் தமிழக பாஜக தலைவராக இருக்கிற அண்ணாமலை தமிழக முதல்வரையும், காவல்துறை டிஜிபியையும் விமர்சித்து வருகிறார். சைலேந்திரபாபு ஒரு நேர்மையான அதிகாரி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ரவுடிகளை கைது  செய்தவர் அவர்.

தமிழக முதல்வர்  எதை செய்ய வேண்டுமோ அந்த வகையில் நல்லதை செய்து கொண்டிருக்கிறார். அதேபோல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரதமர் குறித்து நையாண்டி செய்யப்பட்டிருப்பது தவறான விஷயம், இல்லாததை சொல்லி பிரதமரை அவமதிப்பது கூடாது, ஆனால் உண்மையை நாகரிகமாக சொல்ல வேண்டிய வகையில் சொல்லலாம் அந்த கருத்து சுதந்திரம் நமக்கு உள்ளது. சினிமாவில் கூட நான்கு வரி ஜிஎஸ்டி பற்றி பேசியதற்காக ரெய்டு நடத்தினார்கள், படப்பிடிப்பில் இருந்த விஜய்யை நெய்வேலியிலிருந்து விசாரணைக்காக அழைத்து வந்தனர், மறுநாள் அவரது வீட்டில் ரெய்டு நடந்தது, அதில் என்ன கைப்பற்றப்பட்டது? அப்படி என்றால் அது பழிவாங்கும் நடவடிக்கை தானே. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பாஜக நிச்சயம் கண்டிக்கப்படும். தமிழக பாஜக தற்போது உள்ள நிர்வாகத்தால்  இங்கு வளராது, அரசியல் அனுபவமற்ற அண்ணாமலையால் மோடிக்கு அவப்பெயரை தான் ஏற்படுகிறது.

அவர் முதல்வரையும், டிஜிபி சைலேந்திரபாபுவையும் சைக்கிளில் சென்று போஸ் கொடுக்கிறார்கள் என்று விமர்சிக்கிறார், அவர்கள் விளம்பரத்திற்காக தான் சைக்கிளில் போகிறார்களா? இந்தளவிற்கு தரம் தாழ்ந்து விமர்சிப்பதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதி உள்ளது? கர்நாடகாவில் அண்ணாமலை என்ன காவல்துறை அதிகாரியாக இருந்தார்? சைலேந்திரபாபு குறை சொல்கிற அளவிற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? அதனால்தான் சொல்கிறேன் மோடி அவர்கள் என்ன பாடுபட்டாலும் இங்கு அண்ணாமலை இருக்கும் வரை கட்சி உருப்படாது. அவர் ஒரு காமெடி பிம்பமாக தான் தமிழ்நாட்டில் உலாவருகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

click me!