Local election TN : ஒத்திவைக்கப்படுமா உள்ளாட்சி தேர்தல்..? உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை..

By Raghupati RFirst Published Jan 20, 2022, 10:17 AM IST
Highlights

கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருப்பதால் நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடு களை, மாநில தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. இந்நிலையில், தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம், மாநில தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நடந்தது. இதில் பங்கேற்க  திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக,  இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  உள்ளிட்ட 11 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

அதன்படி, அக்கட்சிகளின் சார்பில், தலா இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள், 'உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தேர்தலை விரைந்து அறிவிக்க வேண்டும்; ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும்' என்றனர். இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த டாக்டர் நக்கீரன் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் கொரோனா பரவல், டிசம்பர் 30ல் 1 சதவீதமாக இருந்தது; ஜனவரி 17ல் 17 சதவீதமாக உயர்ந்துள்ளது. 20 நாட்களில் 17 மடங்கு உயர்ந்துள்ளது. ஜனவரி 17 வரை, தலா 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தினசரி எண்ணிக்கை அதிகரிக்கிறது. மருத்துவமனை, ஆக்சிஜன் வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

சென்னையில் மட்டும் 31 சதவீதம் பேர், தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொள்ளவில்லை.இந்நிலையில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடத்தினால் வைரஸ் பரவல் அதிகரிக்கும். தேர்தல் பிரசாரம், ஊர்வலம், கூட்டங்களில், சமூக இடைவெளியை காற்றில் பறக்க விடுவர். இன்னும் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனவே, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

click me!