
தங்கள் அணியில் இருந்து இரண்டு எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அணிக்கு செல்வதாக கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் மலுப்பலாக சிரித்துகொண்டே சென்றது அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை உண்டாக்கியது.
அதிமுகவில் தற்போது ஒ.பி.எஸ், இ.பி.எஸ், டிடிவி என மூன்று அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அனைவரும் ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டு நாங்கள் தான் உண்மையான அதிமுக என பஜனை பாடிக்கொண்டு வருகின்றனர்.
பன்னீர்செல்வம் அதிமுகவை உடைக்கும் போது கொடுத்த நம்பிக்கையை தற்போது கொடுக்க மத்தியை ஆளும் பாஜக அரசு தவிர்த்து வருவதாக தெரிகிறது.
பாஜக பின்னனியில் ஒபிஎஸ் இருக்கிறார் என்பதை அறிந்த எடப்பாடி அரசு எப்படியாவது ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாங்களும் சரண்டர் என பாஜகவை இறுக்க பிடித்து கொண்டது.
இதனால் மத்திய அரசிடம் இருந்து முன்பு இருந்த நெருக்கடிகள் படிப்படியாக குறைந்து வருவதை காணமுடிகிறது.
தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தாலும் டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு பீதியை கிளப்பிக்கொண்டே இருக்கின்றனர்.
எடப்பாடி தரப்பில் இருந்து ஒவ்வொருவராக நழுவி டிடிவி தினகரன் தரப்பில் ஆஜராகும் இந்நிலையில் ஒ.பி.எஸ் தரப்பில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எடப்பாடி தரப்பிடம் தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சென்னையில் இயங்கி வரும் செம்மொழி ஆய்வு மையத்தை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு மாற்றும் சூழல் ஏற்பட்டால் அது கண்டிக்கத்தக்கது எனவும், காங்கிரஸ் ஜனாதிபதி வேட்பாளரை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் சொல்வது அவரின் தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்தார்.
இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு தங்கள் அணியில் இருந்து இரண்டு எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அணிக்கு செல்வதாக கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, மலுப்பலாக சிரித்துக் கொண்டே சென்று விட்டார் ஓபிஎஸ்.