எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஸ்டாலினோடு உள்குத்து உள்ளதால் தான் கொடநாடு கொலை வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேரணி
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி- ஓ.பன்னீர் செல்வம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தலைமை போட்டியால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியும் வருகிறார். இதற்க்கு போட்டியாக இபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கிய ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை மாவட்ட செயலர்களை நியமித்து வருகிறார். ஒபிஎஸ் அணியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் ராமமூர்த்தி, புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன், புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு பேரணியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான அதிமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இபிஎஸ்- ஸ்டாலின் கூட்டு
இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஒபிஎஸ் அணி மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பியுமான கோபாலகிருஷ்ணன்
ஒபிஎஸ்க்கு ஆதரவாக அதிமுக தொண்டர் படை எழுச்சியோடு தமிழகம் முழுவதும் செல்ல உள்ளதாக தெரிவித்தார். அதிமுகவை ஒபிஎஸ் வழிநடத்த காலம் கனிந்துள்ளதோடு, சட்டமும் கனிந்துள்ளதாக கூறினார். அதிமுகவை வழிநடத்த சரியான தலைவர் ஒபிஎஸ் மட்டுமே என தெரிவித்தவர், 2026 சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீசெல்வம் எனும் நான் என்ற குரல் ஒலிக்க உள்ளதாக தெரிவித்தார். ஒபிஎஸ் தலைமையேற்க சத்தியம் சபதம் ஏற்று அவர் பின்னால் அணிவகுப்போம். அதிமுகவை பிடித்த சதிகாரர்கள் தானாக கெட்டுக்கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
எடப்பாடி பழனிச்சாமி அணியினர் ஸ்டாலினோடு நெருக்கம் காட்டிக்கொண்டு ஒபிஎஸ் மீது பழி சுமத்துவதாகவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஸ்டாலினோடு உள்குத்து உள்ளதால் தான் கொடநாடு கொலை வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். ஊழல் செய்த அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,வேலுமணி உள்ளிட்டோர் கம்பி எண்ண உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்