AIADMK : “ஒரு இலை ஓபிஎஸ்..மற்றொரு இலை இபிஎஸ்..” இரட்டை இலைக்கு புது விளக்கம் கொடுத்த கடம்பூர் ராஜு

By Raghupati RFirst Published Dec 8, 2021, 7:39 AM IST
Highlights

இரட்டை இலையில் ஒரு இலை ஓபிஎஸ், மற்றொரு இலை இபிஎஸ் என்று புது விளக்கம் கொடுத்து இருக்கிறார் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்களை கட்சியின் தொண்டர்களே நேரடியாக தேர்வு செய்யும் விதமாக கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் சட்ட விதிகள் மாற்றப்பட்டது. மேலும்,பொதுச்செயலாளர் அதிகாரம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு கொடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வரும் 7 ஆம் தேதி நடைபெறும் என்றும், 8 ஆம் தேதி அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

மற்ற யாரும் போட்டியிடாததால், இருவரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். அதிமுகவில் நடைபெற்ற உட்கட்சி தேர்தல் செல்லாது என்று நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும்,  முன்னாள்  அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு வாழ்த்துக் கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘முன்னாள் முதல்வர் ஜெயலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி என்பதே கிடையாது. இனி அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி என்பது கிடையாது. ஒரே பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. இனி அதிமுகவில் இரட்டை தலைமை தான். இதன் சட்ட விதிகளை மாற்றி தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் - இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் இரட்டை இலையில் இரண்டு இலைகளாக இருந்து கட்சியை வழி நடத்துவார்கள்.தமிழகத்தில் தேசிய கட்சி காலூன்ற வாய்ப்பில்லை என்பது காலம் காலமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை ஆட்டி பார்க்கவோ, அசைத்து பார்க்கவோ முடியாத ஒன்று’ என்று கூறினார்.

click me!