லாபம் வந்தால் எனக்கு.. நஷ்டம் வந்தால் மூடுவதா? உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லையா.. கொதிக்கும் கமல்..!

By vinoth kumarFirst Published Sep 18, 2021, 11:12 AM IST
Highlights

பிற்பாடு கமிஷன் சாம்ராஜ்யத்தால் இந்த கார் கம்பெனிகள் அல்லாடியதும், தங்களுக்கு வரவேண்டிய மதிப்புக் கூட்டு வரி பங்கினை வாங்குவதற்குக்கூட தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியிருந்ததும் தமிழகத்தின் ஊழல் மலிந்த கழக ஆட்சிகளின் துயர வரலாறு.

 ஃபோர்டு நிறுவனத்தின் ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- 1995-ல் ஃபோர்டு நிறுவனத்துடன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. ஏராளமான தளர்வுகளும் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளும் ஃபோர்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டன.அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்தாலும் தமிழக தொழிற்துறை வரலாற்றைப் பொருத்தவரை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மிக முக்கியமானது. அடுத்தடுத்து பல கார் தொழிற்சாலைகள் தங்கள் தயாரிப்பை தமிழகத்தில் துவங்க இந்த ஒப்பந்தம் காரணமாக அமைந்தது.

தமிழக அரசின் உயரதிகாரிகள் பலரின் இரவு பகலான உழைப்பு இதன் பின்னால் இருந்தது. பிற்பாடு கமிஷன் சாம்ராஜ்யத்தால் இந்த கார் கம்பெனிகள் அல்லாடியதும், தங்களுக்கு வரவேண்டிய மதிப்புக் கூட்டு வரி பங்கினை வாங்குவதற்குக்கூட தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியிருந்ததும் தமிழகத்தின் ஊழல் மலிந்த கழக ஆட்சிகளின் துயர வரலாறு. 1996-ல் 1,500 கோடி முதலீட்டில் ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தன் தயாரிப்பைத் துவங்கியது. முதற்கட்டமாக சுமார் 2,100 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளித்தது. பிறகு படிப்படியாக பல அடுக்குகளாக தொழிற்சாலையை விரிவாக்கம் செய்துகொண்டது. ஏறத்தாழ தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் அனைவருமே வெவ்வேறு காலகட்டங்களில் ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று நேரடியாக சுமார் 4,000 தொழிலாளர்களுக்கும் மறைமுகமாக சுமார் 25,000 பேருக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது ஃபோர்டு இந்தியா நிறுவனம். தொழில் விரிவாக்கம் என்பது இலாபம், எதிர்காலச் சந்தை தேவை ஆகியவற்றை மனதிற்கொண்டே நிகழும். ‘25 ஆண்டுகளுக்குப் பின் எங்களுக்கு பலத்த நஷ்டம், நிறுவனத்தை விரைவில் மூடப்போகிறோம்' என அறிவித்திருக்கிறது ஃபோர்டு நிறுவனம். நிர்வாகத்தின் இந்தத் திடீர் முடிவினால் இந்நிறுவனத்தின் நேரடி மற்றும் மறைமுக ஊழியர்களும் அவர்களது குடும்பத்தாரும் நிலைகுலைந்து போயுள்ளனர். ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நசிவு, கொரோனா கால வருவாய் இழப்புகள் என தமிழகம் தத்தளித்து வருகிறது. இத்தனை பேருக்கும் உடனடியாக மாற்று வாழ்வாதாரம் கிடைக்க வழியே இல்லை.

கடுமையான முயற்சிகள் எடுத்து ஏராளமான சலுகைகளை அறிவித்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மக்களுக்கு நிரந்தரமான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கத்தான். லாபம் வந்தால் எனக்கு நஷ்டம் வந்தால் மூடிவிட்டு ஓடிவிடுவோம் எனும் குறுகிய மனப்போக்கு ஏற்புடையதல்ல. இதுநாள் வரை தமிழக அரசினால் அளிக்கப்பட்ட சலுகைகள், தளர்வுகள், உதவிகள், மானியங்கள், நீர் உள்ளிட்ட வளங்கள் ஆகியவற்றுக்குப் பொருளே இல்லாமல் ஆகிவிடும். முதலீட்டை ஈர்ப்பதில் காட்டும் அக்கறையும் கவனமும் அந்நிறுவனங்களினால் மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் பலன் கிடைப்பதை உறுதி செய்வதிலும் காட்டவேண்டும். தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஃபோர்டு நிறுவனத்தின் ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு கடந்த 1995 ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் நுழைந்தது. இந்த நிறுவனத்துக்கு சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ளனர். ஃபோர்டு நிறுவனத்துக்கு சென்னையை அடுத்த மறைமலைநகர், குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் 250 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக விற்பனை பாதிப்பு, தொடர் நஷ்டத்தால் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதாக ஃபோர்டு நிறுவனம் திடீரென அறிவித்துள்ளது. இதனால் 44 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தியாவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ், ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்கள் மூடுவதாக அறிவித்த நிலையில் தற்போது ஃபோர்டும் இவ்வாறு அறிவித்துள்ளது.

click me!