கொத்தா சிக்கும் விஜயபாஸ்கர்.. மனைவி, சகோதரர் வங்கி லாக்கர்கள் மற்றும் கணக்குகளை ஆய்வு செய்ய முடிவு.

By Ezhilarasan BabuFirst Published Jul 23, 2021, 1:10 PM IST
Highlights

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது  தேசிய நெடுஞ்சாலைகளில் ஸ்டிக்கர், ஒளிப்பட்டை, நவீன கருவிகள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பான டெண்டரை 23 கோடி ரூபாயில் இருந்து 900 கோடி ரூபாயாக உயர்த்தி  முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக தரப்பில் கடந்த ஆண்டு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், அவரது மனைவி மற்றும் உறவினர்களின் வங்கி லாக்கர்கள் மற்றும் கணக்குகளை ஆய்வு செய்ய உள்ளனர். முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் உறவினர்கள் வீடு ஆதரவாளர்கள் வீடு என சென்னை மற்றும் கரூரில் சுமார் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு மேற்கொண்டு இந்த சோதனையை நடத்தினர்.  

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது  தேசிய நெடுஞ்சாலைகளில் ஸ்டிக்கர், ஒளிப்பட்டை, நவீன கருவிகள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பான டெண்டரை 23 கோடி ரூபாயில் இருந்து 900 கோடி ரூபாயாக உயர்த்தி  முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக தரப்பில் கடந்த ஆண்டு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதுபோன்று போக்குவரத்து துறை அமைச்சராக எம் ஆர் விஜயபாஸ்கர் இருந்த போது முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் குவிந்தன. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரு மாத காலம் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருமானத்திற்கு அதிகமாக எம் ஆர் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்ததற்கான முகாந்திரத்தை உறுதிப்படுத்தினர். இதன் அடிப்படையில் நேற்று நடந்த சோதனையில் சுமார் 25 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.  மேலும் முக்கிய ஆவணங்கள், காப்பீடு தொடர்பான ஆவணங்கள், முதலீடு தொடர்பான ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் சகோதரர் சேகர் ஆகியோருடைய வங்கி கணக்குகள் மற்றும் வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்ய உள்ளனர். குறிப்பாக அமைச்சராக இருந்த காலத்தில் எம்ஆர் விஜயபாஸ்கர் தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்து ஆவணங் களைத் திரட்டி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர். முதற்கட்ட ஆய்வில் பெரும்பாலும் எம்ஆர் விஜயபாஸ்கர் தனது பெயரில் வங்கிக் கணக்குகள் பெரிதாக வைத்திருக்க வில்லை என தெரியவந்துள்ளது. அவர் நடத்தும் நிறுவனங்களின்  பெயரிலேயே வங்கி கணக்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து விஜய் பாஸ்கர் மற்றும் அவரது மனைவி சகோதரர் பெயரில் வாங்கப்பட்ட சொத்துகள் குறித்து ஆவணங்களை பத்திரப்பதிவு துறை மூலம் பெறுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

 

சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கிடைக்கப் பெற்றாலும் வேறு ஏதேனும் பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி வைத்துள்ளார்களா என்பதை கண்டறியவும் பத்திரப் பதிவுத் துறையில் ஆவணங்களை நடைபெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவிக்கின்றனர். கிடைக்கப்பெறும் ஆவணங்கள்,ஆதாரங்களை வைத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் உள்ளிட்டோருக்கும்,தொடர்புடைய பங்குதாரர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறை போலிசார் முடிவு செய்துள்ளனர்.
 

click me!