
ஊரக உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒன்பது மாவட்டங்களில் 169 இடங்களில் விஜய்யின் ரசிகர்கள் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் முதலில் 77 பேர் வெற்றி பெற்றதாக அறிவித்த விஜய் மக்கள் இயக்கம், பின்னர் 110 பேர் வெற்றி பெற்றதாக அறிவித்தது. விஜய் மக்கள் இயக்கத்தின் இந்த வெற்றி பெரிதும் பேசப்பட்டது. நீண்ட காலமாக தேர்தல் களத்தில் இருக்கும் கட்சிகளையும் சீமான், கமல்ஹாசன் போன்றவர்களின் கட்சிகளைத் தாண்டி விஜய் மக்கள் இயக்கம் பெற்ற வெற்றி அரசியல் அரங்கிலும் உற்று நோக்கப்பட்டது.
அரசியலுக்குள் வர நோட்டம் விஜய் நோட்டம் விட்டுக்கொண்டிருக்கும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றி அதற்கு பாதை அமைத்துக் கொடுத்தது போல ஊரக உள்ளாட்சித் தேர்தல் அமைந்தது. இதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், விஜய் மக்கள் இயக்கம் தேர்தல் களத்தில் இருந்தது. தங்கள் கட்சிக்கு பொதுச் சின்னமாக ஆட்டோ சின்னத்தைக் கேட்டு விஜய் மக்கள் இயக்கம் விண்ணப்பித்தது. ஆனால், பதிவு செய்த கட்சிகளுக்கு மட்டுமே பொதுச் சின்னம் வழங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் கைவிரித்தது. என்றாலும் சுயேட்சை சின்னங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பரவலாக களமிறங்கினர்.
நகர்ப்புற உள்ளாசித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினரும் வெற்றியைப் பெற்று உள்ளனர். நகராட்சி, பேரூராட்சிகளில் 6 வார்டுகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகராட்சி 136 வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்ட அறிவுச்செல்வி 5,112 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்து திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். இந்த வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். ஆனால், இந்த வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைவிட விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் சுமார் இரண்டாயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருப்பதன் மூலம் விஜய் மக்கள் இயக்கம் அதிர வைத்திருக்கிறது.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசனே ஊரக உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் ஓரிடத்தில் வெற்றியைப் பெற போராடி வருகிறார். ஆனால், அரசியலில் களமிறங்கும் முன்பே ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று அசத்தியிருக்கிறார்கள். கடந்த 2001-ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் தன்னுடைய ரசிகர்களை உள்ளாட்சித் தேர்தலில் களமிறக்கி அரசியலுக்கு வர நூல் விட்டுப் பார்த்தார். அந்தத் தேர்தலில் பலர் வெற்றி பெற்று விஜயகாந்துக்கு நம்பிக்கையூட்டினர். அதன் தொடர்ச்சியாகத்தான் 2005-ஆம் ஆண்டில் விஜயகாந்த் அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவருடைய வழியில் இனி விஜய்யும் அரசியலில் களமிறங்கும் காலம் நெருங்கிவிட்டதாகத் தெரிகிறது. அதற்கு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் விஜய்க்கு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறது.