
2021 சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான நேரத்தில் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் அழுது கொண்டிருந்தது. ஆனால் கொங்கு மண்டல அ.தி.மு.க. மட்டும் அந்த துயரத்திலும் புன்னகைத்தது. காரணம்? அம்மண்டலத்தில் மட்டும் பல தொகுதிகளில் வெற்றியை அடித்து அள்ளியிருந்தது அக்கட்சி.
அதிலும் கொங்கின் தலைநகரான கோவை மாவட்டத்தில் பத்துக்கு பத்து தொகுதிகளை அக்கட்சி வென்றிருந்தது (ஒன்று மட்டும் கூட்டணியான பி.ஜே.பி.யின் கையில்). இதனால் வேலுமணியை கொண்டாடினர் அம்மாவட்ட அ.தி.மு.க.வினரும், அக்கம் பக்க மாவட்ட அ.தி.மு.க.வினரும். கண்ணாடி முன் நின்ற வேலுமணி தன்னை சின்ன எம்.ஜி.ஆர். ஆகவோ, கொங்கு ஜெயலலிதாவாகவோ, இன்னொரு எடப்பாடியாரகவோ கூட நினைத்துப் பார்த்திருக்கலாம். அப்படியொரு வெற்றி, அசகாய வெற்றி.
அதனால்தான் அடுத்த சில வாரங்களில் அவர் வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டை தமிழக அரசு அனுப்பியபோது எக்கச்சக்க நபர்களை தன் வீட்டு முன் குவித்தார், உள்ளே ரெய்டு தொடர தொடர வெளியே தக்காளி சாதம், தயிர் சாதம், காஃபி, டீ என்று கூடியோருக்கு கவனிப்புகள் அதிர்ந்தன. அவர் மட்டுமல்ல, அவரது நிழலாக் பார்க்கப்படும் பொறியாளர் சந்திரசேகரின் மாட மாளிகை முன்பும் இதே நிலைதான். இந்த மாதிரியான பிம்பங்களின் மூலம் வேலுமணி காட்டியது ‘தி.மு.க. ஆட்சியிலும் நானே கோவையின் ராஜா. என்னை ஆட்ட, அசைக்க முடியாது.’ என்பதே.
ஆனால் இன்று ரிசல்ட் வெளியாகியிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலோ கோவையில் மிக மோசமாக மண்ணைக் கவ்விவிட்டது அ.தி.மு.க. இதனால் தி.மு.க. ஆட்சியிலும் தலைநிமிர்த்தி நடந்த வேலுமணி அண்ட்கோவினர் இப்போது செம்ம அப்செட். ஏற்கனவே தேர்தலுக்கு இரண்டு மூன்று நாட்கள் முன்பு வரை கலெக்டர் அலுவலகம் முற்றுகை அதுயிதுவென ஆர்பாட்டம் பண்ணி ‘ஜனநாயகத்தை பண நாயகத்தால் வீழ்த்த துடிக்கிறது தி.மு.க.’ என்று ஒரு ஸ்டேட்மெண்டை போட்டு வைத்துவிட்டார் வேலு. அவர் நினைத்தது போலவே ரிசல்ட் அமைந்துவிட்டது.
இந்நிலையில் கோயமுத்தூர் தி.மு.க.வினர் ‘ஹல்ல்லோ மிஸ்டர் வேலு எங்கே மேன் போயிட்டீங்க? ஆளையே காணோம்!’ என்று கலாய்த்து வருகின்றனர் சோஷியல் மீடியாவில்.