ஒரே பாடலில் தன் நிலையை உணர்த்திய ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் பரபரப்பு.. அதிர்ச்சியில் அதிமுக எம்எல்ஏக்கள்.

By Ezhilarasan BabuFirst Published Aug 28, 2021, 3:39 PM IST
Highlights

அப்போது குறுக்கிட்ட நீர்வளத் துறை அமைச்சர், மூத்த உறுப்பினர் துரைமுருகன், வேளாண் சட்டத்தில் பாதகங்கள் இருப்பது குழந்தைகளுக்கு கூட தெரியும், அதெல்லாம் இருக்கட்டும் இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா.? எதிரிகளா.? என கேள்வி முன் வைத்தார். 

"நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு. இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு.."  இதுதான் என் தற்போதைய நிலை. இது அவை முன்னவர் துரைமுருகனுக்கும் தெரியும் என  ஓ.பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் பேசி இருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தான் எந்த முடிவையும் எடுக்க முடியாத சூழ்நிலையில் தவிப்பதாக அவர் இந்த பாடல் மூலம் வெளிபடுத்தியுள்ளார் என்றே பலரும் புரிந்து கொண்டுள்ளனர். 

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் பல்வேறு அதிரடி  அறிவிப்புகள் வெளியாகிவருகிறது. அதே நேரத்தில்  திமுக அரசின் நடவடிக்கைகள், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அணுகுமுறைகள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சட்டமன்றத்திலும் கூட தனிநபர் புகழ்ச்சி தேவையில்லை என முதல்வர் தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு தடைபோட்டிருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஆட்சி பொறுப்பு ஏற்றதும் எதிர்க்கட்சியினரை அவையில் ஸ்டாலின் சின்னாபின்னமாக்க போகிறார் பார் என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், அதற்கு நேர்மாறாக எதிர்க்கட்சியினருக்கு உரிய அங்கீகாரம் வழங்கி, உரிய மதிப்பளித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசும்போதுகூட ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குறுக்கீட்டு இடையூறு செய்ய வேண்டாமென ஸ்டாலின் நேற்று அமைச்சர் கே. என் நேருவுக்கு அட்வைஸ் செய்ததே இதற்கு சிறந்த உதாரணம். 

அதேபோல எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்பதை மறந்து பரஸ்பரம் மூத்த தலைவர்களான துரைமுருகன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மனம் திறந்து ஒருவரை ஒருவர் பாராட்டி பேசி கருத்துக்களை சகிதம் பரிமாறிக் கொள்வது அவையில் இதுவரை இல்லாத ஒருவகை இணக்கத்தை, மாண்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக  சட்டசபையில் இன்று தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். பிறகு வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில்  வழக்கில் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் எனவும், அதேபோல இந்த சட்டத்தில் சாதக பாதகங்கள் என்ன என்பதை அறிந்து மத்திய அரசிடம் எடுத்துரைக்கலாம் என்றும், பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வரை பொறுமையாக இருக்கலாம் என்றும் கருத்து கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீர்வளத் துறை அமைச்சர், மூத்த உறுப்பினர் துரைமுருகன், வேளாண் சட்டத்தில் பாதகங்கள் இருப்பது குழந்தைகளுக்கு கூட தெரியும், அதெல்லாம் இருக்கட்டும் இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா.? எதிரிகளா.? என கேள்வி முன் வைத்தார். அதற்கு எழுந்து நின்று பேசிய ஓ.பன்னீர் செல்வம், துரைமுருகன் அவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த மறையாதை உள்ளது.  தம்முடைய நிலையை எண்ணும் போது, நதியினில் வெள்ளம்.. கரையினில் நெருப்பு.. இரண்டுக்கும் நடுவே  இறைவனின் சிரிப்பு.. இதுதான் என் தற்போதைய நிலை, இது அவை முன்னவர் துரைமுருகனுக்கு தெரியுமென பன்னீர்செல்வம் கவிஞர் கண்ணதாசனின் வரிகளை மேற்கோள் காட்டி தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார். அவரின் இந்த கருத்தை  கேட்டா எதிர்க்கட்சியினர் ஒரு நிமிடம் நிசப்தம் ஆயினர்.அவை முன்னவர் துரைமுருகன் தாம் தெரிவித்த கருத்துக்கள் ஓ. பன்னீர்செல்வத்தின் மனதை தனிப்பட்ட முறையில் காயப்படுத்தி இருந்தால் அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் கோரினார்.
 

click me!