தமிழகத்தில் பாஜக செய்யப்போகும் அதிரடி ட்விஸ்ட்... அக்கு வேர் ஆணி வேராக பிரித்து மேய அதிரடித் திட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Sep 4, 2019, 12:22 PM IST
Highlights


தமிழகத்தில் தாமரையை மலர வைக்க பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்த பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

தமிழகத்தில் தாமரையை மலர வைக்க பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்த பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  

தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா கவர்னராக பொறுப்பேற்க உள்ள நிலையில் அவர் வகித்து வந்த தமிழக பாஜக தலைவர் பொறுப்பு காலியாக உள்ளது. அந்த இடத்திற்கு பலரது பெயர் அடிபடும் நிலையில் அவர்களில் 2 பேரின் பெயர் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவின் தமிழக தலைவராக தமிழிசை சவுந்தர ராஜன் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். 2019-மக்களவை தொகுதி தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட அவர், திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியடைந்தார். இந்த நிலையில் அவரை தெலங்கானா கவர்னராக அறிவித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் என அனைத்து பொறுப்புகளையும் தமிழிசை ராஜினாமா செய்திருக்கிறார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021-ல் சட்டமன்ற தேர்தலை தமிழக எதிர்கொள்ள இருக்கிறது. இந்த நிலையில், இவ்விரு தேர்தல்களையும் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் அடுத்த தலைவர் யார் என்கிற எதிர்பார்ப்பில் பாஜக தொண்டர்கள் உள்ளனர். 

அடுத்த தலைவர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, உள்ளட்டோரது பெயர்கள் அடிபடுகின்றன. இருப்பினும், கட்சியின் மாநில செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளராக இருக்கும் கே.டி.ராகவன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகிய 2 பேரின் பெயர்தான் தலைவர் பொறுப்புக்கு முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதே சூழலில் தொண்டர்களின் ஆதரவை பெருவாரியாக பெற்றவரும், கட்சியின் தேசிய செயலாளராக இருப்பவருமான எச்.ராஜாவின் பெயரும் தமிழக தலைவர் பதவிக்கு பரிசீலனையில் உள்ளது. இந்த லிஸ்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த குப்புராம் பெயரும் வலுவாக அடிபடுகிறது. இவரை மாநில தலைவராக்கி விட்டு தமிழகத்தை ஐந்து மண்டலங்களாக பிரித்து, ஐந்து செயல்தலைவர்களை நியமிக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவை மேற்கு மண்டலத்தில் வானதி சீனிவாசன், தெற்கு மாவட்டங்களுக்கு நயினார் நாகேந்திரன், சென்னை மண்டலத்திற்கு கே.டி.ராகவன் உள்ளிட்டோர் பெயரும் அடிபடுகிறது. 

தமிழகத்தில் பாஜகவை வளர்த்தெடுத்து தாமரையை மலர வைத்தே ஆக வேண்டும் என்கிற நிலையில் பாஜக ஐந்து செயல் தலைவர்களை நியமித்து தமிழகத்தில் கட்சியை வலுப்பெற இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நிர்வாகிகளை கலந்து ஆலோசித்த பின்னர் இன்னும் ஓரிரு நாட்களில் அடுத்த தலைவர் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!