
ஓகி புயலால் கடலில் மாயமான குமரி மாவட்ட மீனவர்களை விரைந்து மீட்டு தர வலியுறுத்தி சென்னையில் தலைமை செயலகத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற மீனவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் கரை திரும்பவில்லை. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் கரை ஒதுங்கிய மீனவர்களை மீட்டு கொண்டுவரும் பணிகளும் நடந்துவருகின்றன.
இந்திய கப்பற்படை, கடலோர காவற்படை மற்றும் விமானப்படை ஆகியவை மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றன. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கரை ஒதுங்கியுள்ள மீனவர்களை மீட்கும் பணிகளும் நடந்துவருகின்றன.
எனினும் மீனவர்களை மீட்கும் பணிகளில் மத்திய மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவதாகவும் மீனவ மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடலில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மீனவ மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கம், நொச்சிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவ மக்கள் 1000 பேர், கடலில் மாயமான குமரி மாவட்ட மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர வலியுறுத்தி தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். ஆனால், முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்து மீனவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆனால், சேப்பாக்கத்தில் மீனவ மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், குமரி மாவட்டம் குளச்சலிலும் 9 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் செய்வதற்காக அவர்கள் பேரணியாக செல்கின்றனர்.