கனிமொழி மேடம்க்கு தான் முதல் நன்றி..! உருகிய தூத்துக்குடியின் 15 குடும்பங்கள்..!

By Selva KathirFirst Published May 22, 2021, 10:44 AM IST
Highlights

தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடைபெற்ற கலவரத்தில் மேற்கொள்ளப்பட்ட போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேர் மற்றும் காயம் அடைந்த 4 பேர் என மொத்தம் 17 பேரின் குடும்பங்கள் தாங்கள் கனிமொழி மேடமுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடைபெற்ற கலவரத்தில் மேற்கொள்ளப்பட்ட போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேர் மற்றும் காயம் அடைந்த 4 பேர் என மொத்தம் 17 பேரின் குடும்பங்கள் தாங்கள் கனிமொழி மேடமுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் பேரணி வன்முறையில் முடிந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 103 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் நான்கு பேர் நிரந்தர ஊனம் அடைந்தனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு விதிகளை மீறி நடைபெற்றதாக புகார் எழுந்தது. வன்முறையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை காட்டிலும் மக்களை சுட்டுக் கொலை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனை அடுத்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மக்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதே போல் நிரந்தர ஊனம் அடைந்தவர்களுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனை அடுத்து உயிரிழந்தவர்களில் 13 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு சார்பில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு வேலை கொடுத்தார். இதே போல் நிரந்தர ஊனம் அடைந்த நான்கு பேருக்கும் அரசு வேலை கொடுக்கப்பட்டது.

ஆனால் தமிழக அரசு கொடுத்துள்ள இந்த அரசு வேலை தங்கள் கல்வித் தகுதிக்கு ஒத்ததாக இல்லை என்று அவர்கள் புகார் கூற ஆரம்பித்தனர். பொதவாக அரசு வேலை என்பதை கருணை அடிப்படையில் வழங்கும் போது கல்வித்தகுதி அடிப்படையில் தான் வழங்க வேண்டும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கிடையே மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழியை சந்தித்த பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழஙக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பிறகு கனிமொழி வெற்றி பெற்று எம்பியான பிறகும் அவரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

கனிமொழியும் சட்டமன்ற தேர்தல்  பிரச்சாரத்தின் போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று கூறியிருந்தார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில் உடனடியாக இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அரசு வேலை கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் கல்வித் தகுதி அடிப்படையில் புதிய வேலை கொடுப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

கொரோனா ஆய்வுக்காக மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு மாவட்ட ஆட்சியரகத்தில் 15 பேரை நேரில் வரவழைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் திமுக மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழியும் பங்கேற்றார். அத்தோடு பணி நியமன ஆணைகளை பெற்றவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனித்தனியாகவும் கனிமொழி  அறிமுகம் செய்து வைத்தார். இதன் பிறகு பணி நியமன ஆணை பெற்றவர்கள் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஒருவர் விடாம அனைவரும் முதலில் கனிமொழிக்குத்தான் நன்றி தெரிவித்தனர்.

அரசு வேலை கிடைப்பதே பெரிது என்று எங்களை பலர் சமாதானம் செய்தனர் ஆனால் உங்கள் கல்விக்கு தகுந்த வேலை கிடைப்பதை நான் உறுதி செய்வேன் என்று கூறி அதை நிறைவேற்றியும் கொடுத்துள்ளார் கனிமொழி மேடம் என்று சிலர் கண்கலங்கினர். அத்துடன் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

click me!