முதலில் ஆலோசனை.. பிறகு சூட்டிங்.. தொடர்ந்து அரசியல் கட்சி.. களம் இறங்க தயாராகும் ரஜினி..!

By vinoth kumarFirst Published Sep 21, 2020, 11:37 AM IST
Highlights

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனையை தொடர்ந்து அண்ணாத்த படப்பிடிப்பை முடித்த கையோடு அரசியல் கட்சி முடிவை அறிவிக்க நடிகர் ரஜினி தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனையை தொடர்ந்து அண்ணாத்த படப்பிடிப்பை முடித்த கையோடு அரசியல் கட்சி முடிவை அறிவிக்க நடிகர் ரஜினி தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியலுக்கு வர உள்ளதாக நடிகர் ரஜினி அறிவித்து ஏறக்குறைய 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. ஆனால் தற்போது வரை அரசியல் கட்சி துவங்குவது தொடர்பாக ரஜினி வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை. ஆனால் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ந் தேதி ரஜினி கூறியது சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்பது தான். இந்த வார்த்தையை நம்பி தான் ரசிகர்கள் ரஜினி எந்த நேரத்திலும் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் வருகை குறித்து பேசிய ரஜினி உறுதியான எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.

இதனால் 2021 சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே ரஜினி தனது சினிமா பாணியிலேயே அரசியலில் ஈடுபடும் திட்டத்துடன் உள்ளதாக கூறுகிறார்கள். அதாவது ரஜினி ஒரு படத்தில் பணியாற்ற ஆரம்பித்தால், அந்த படம் வெளியாகும் வரை எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கும். அதே போலத்தான் ரஜினி தேர்தல் வரை தன் மீதான எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பதாக கூறுகிறார்கள்.

தான் அரசியலுக்கு வந்த பிறகு அரசியல் தன்னை மையமாக வைத்தே இயங்க வேண்டும் என்பதும் ரஜினியின் வியூகம் என்கிறார்கள். தேர்தலில் வெற்றி – தோல்வி இரண்டாவது பட்சம் தான் ஆனால் தேர்தல் களத்தில் முன்னணியில் ரஜினி இருக்க வேண்டும். அதற்கு குறுகிய நாட்கள் போதும் என்றும் ரஜினி கருதுகிறார். துவக்கத்திலேயே அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டால் ஏதாவது ஒரு பிரச்சனையை பெரிதாக்கி அதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்குவார்கள், விஜயகாந்தை போல் தன்னையும் கேலிப் பொருளாக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் ரஜினி உணர்ந்து வைத்துள்ளார்.

எனவே மிக குறுகிய காலத்திற்குள் தேர்தலை எதிர்கொண்டுவிட வேண்டும் என்பது ரஜினியின் வியுகம் என்கிறார்கள். தன்னை எதிர்ப்பவர்களுக்கு சிறிது கூட அவகாசம் கொடுக்காமல் தேர்தல் களத்தில் இறங்கி வெற்றியை நோக்கி பயணத்தை தொடங்கிவிட வேண்டும் என்று ரஜினி திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். எனவே தான் அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் ரஜினி மிகவும் கவனமாக செயல்படுவதாகவும் சொல்கிறார்கள். அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினி மீண்டும் சந்திக்கிறார். அப்போது வேட்பாளர் தேர்வு, தேர்தல் செலவு குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என்கிறார்கள்.

இதனை தொடர்ந்து அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு 20 நாட்கள் மட்டும் ரஜினிக்கு பாக்கி உள்ளதாக சொல்கிறார்கள். அந்த சூட்டிங்கை முடித்துக் கொடுக்க ரஜினி ஐதராபாத் செல்ல உள்ளார் என்கிறார்கள். அண்ணாத்த சூட்டிங் முடிந்த கையோடு ரஜினி சென்னை திரும்பி அரசியல் கட்சி வேலைகளை முடுக்கிவிடுவார் என்கிறார்கள். நவம்பர் துவக்கத்திலேயே அரசியல் கட்சியின் பெயரை ரஜினி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். அப்போது முதல் தேர்தலுக்கு சரியாக 6 மாதம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே அந்த ஆறு மாத காலத்திற்குள் தமிழக அரசியல் களத்தை மாற்றத்திற்கான அடித்தளமாக்க வேண்டும் என்று வியூகம் வகுத்து ரஜினி செயல்படுவார் என்கிறார்கள்.

வேட்பாளர் தேர்வை பொறுத்தவரை தற்போதே ரஜினி பாதி பணிகளை முடித்துவிட்டதாக சொல்கிறார்கள். சில தொகுதிகளில் வேட்பாளர்களாக ரஜினி தீர்மானித்து வைத்திருக்கும் நபர்கள் தேர்தல் செலவுக்கு என்ன செய்யப்போகிறார்கள்’? என்று மட்டும் ரஜினி தெளிவு பெற வேண்டியுள்ளது. அதற்கான தெளிவு கிடைத்துவிட்டால் ரஜினி அரசியல் களத்தில் இறங்கிவிடுவார் என்கிறார்கள்.

click me!